Published : 12 Jul 2014 09:33 AM
Last Updated : 12 Jul 2014 09:33 AM

துப்பாக்கி சுடும் திறமையை மக்கள் மீது காட்டக்கூடாது: போலீஸாருக்கு டிஜிபி ராமானுஜம் அறிவுரை

துப்பாக்கி சுடும் திறமையை போலீஸார் பொதுமக்களிடம் காட்டக்கூடாது. துப்பாக்கி சுடும் மையங்களிலும், பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும்போதும் மட்டுமே அந்த திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்று டிஜிபி ராமானுஜம் கூறினார்.

தமிழ்நாடு காவல் துறையின் அதிதீவிரப்படைப் பிரிவு சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் மையத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழக காவல் துறையின் 4 மண்டலங்கள் மற்றும் அதிதீவிரப்படை, ஆயுதப்படை, சென்னை மாநகர காவல்துறை ஆகிய 7 அணிகளில் இருந்து 210 போலீஸார் பங்கேற்றனர். 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆயுதப்படை சாம்பியன்

இதில் ஆயுதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை புளியந்தோப்பு இணை ஆணையர் சுதாகர் 60-க்கு 60 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை அதிதீவிரப்படை பிரிவு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. வெற்றி பெற்ற 57 போலீஸாருக்கு கேடயங்களையும், 12 அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும் தமிழக டிஜிபி ராமானுஜம் வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது தேசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான அடிப்படை. தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் தமிழக போலீஸார் முதலிடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

‘திறமையை காட்டுங்கள்’

குற்றங்களை அறிவியல் முறையில் கண்டுபிடிக்கும் போட்டி, தேசிய அளவில் போலீஸாருக்கு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் போலீஸார் தங்கள் திறமைகளை பணியிலும் காட்டி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். துப்பாக்கி சுடும் திறமையை போலீஸார் பொதுமக்களிடம் காட்டக்கூடாது. துப்பாக்கி சுடும் மையங்களிலும், பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும்போதும் மட்டுமே அந்த திறமையைப் பயன்படுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது தற்காப்புக்காக பயன்படுத்தலாம்.

பரிசு 10 மடங்கு உயர்வு

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி களில் தங்கப் பதக்கம் வென்றவர் களுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இது தற்போது 10 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

தேசிய அளவிலான கால்பந்து போட்டி 62 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதில் தமிழக போலீஸ் அணி இதுவரை வெற்றி பெற்றதில்லை. இந்த ஆண்டு தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது. கைப்பந்து போட்டியிலும் 3-ம் இடம் பிடித்துள்ளது.

இவ்வாறு டிஜிபி ராமானுஜம் கூறினார்.

‘நல்ல யோசனை’

‘‘துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கும் போலீஸார் தங்கள் பணிக்காலத்தை போட்டிக்காகவே செலவிடுகின்றனர். இவர்களது திறமையை பயங்கரவாதத் தடுப்பில் பயன்படுத்தலாமே. அவர்களைக் கொண்டு தனிப்படை அமைத்து பயங்கரவாத தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்தலாமே’’ என்று டிஜிபியிடம் கேட்டதற்கு, ‘‘நல்ல யோசனை. துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இதுவரை பயங்கரவாத தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது தெரியவில்லை. இந்த யோசனை பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x