Last Updated : 30 Jun, 2023 04:28 PM

 

Published : 30 Jun 2023 04:28 PM
Last Updated : 30 Jun 2023 04:28 PM

திகிலூட்டும் சேலம் பட்டர்ஃபிளை மேம்பாலம் - பாதுகாப்பு திட்டமிடல் இல்லாததால் விபத்து அபாயம்

சேலம்: சேலத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பட்டர்ஃபிளை மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் ரோடும், தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம் மிகவும் குறுகலாக இருப்பதால், அங்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

மேலும், பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் போதிய வழிகாட்டி பலகையும் இல்லாததால், வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் தொடர்கிறது. சேலம் மாநகரை ஒட்டியபடி சேலம் - கொச்சி, கன்னியாகுமரி - காசி, சேலம் - சென்னை என 3 தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

இந்த 3 தேசிய நெடுஞ்சாலைகளையும் மாமாங்கம் - சீலநாயக்கன்பட்டி வரையிலான சாலை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது. இந்த சாலை வழியாக, கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் மற்றும் உள்ளூர் இரு சக்கர வாகனங்கள் என தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், பாதுகாப்பு அம்சங்கள் போதிய அளவு இல்லை என்பது மக்களின் கருத்து. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கந்தம்பட்டி மேம்பாலம் தொடங்கி, கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலான சாலையில், பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியது: சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் தொடங்கி கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலான சாலையில், கந்தம்பட்டி மேம்பாலம், சிவதாபுரம் மேம்பாலம், பட்டர்ஃபிளை மேம்பாலம் என 3 மேம்பாலங்கள் குறுக்கிடுகின்றன. இதில், சிவதாபுரம் மேம்பாலம் தொடங்கி, பட்டர்ஃபிளை மேம்பாலம் வரையிலான சாலை மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.

குறிப்பாக, சிவதாபுரம் மேம்பாலத்துக்கான சர்வீஸ் ரோடு முடிவடையும் இடத்தில், பட்டர்ஃபிளை மேம்பாலம் தொடங்குகிறது. ஆனால், சர்வீஸ் ரோடு, பிரதான சாலையுடன் இணையும் இடம் இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய வகையில் சாலையின் அகலம் குறைவாக இருக்கிறது.

இந்நிலையில், இருவழிச்சாலையாக சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், நேரடியாக பிரதான சாலையில் நுழையும்போது, மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங்கும் வாகனங்களுடன் மோதக்கூடிய அபாயம் நிலவுகிறது. இதனால், மேம்பாலம் வழியாக வரக்கூடிய வாகனங்களுக்கு எப்போதும் விபத்து அபாயம் காத்துள்ளது.

சாலையை மறிக்கும் தூண்: சர்வீஸ் ரோடு, பிரதான சாலையுடன் இணையும் இடத்தில், நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகை பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையின் தூண், சாலையை மறிப்பது போல வைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வீஸ் ரோடு வழியாக வரும் வாகனங்கள், பிரதான சாலையின் குறுக்கே புகுந்து செல்வது போல, உள்நோக்கி திரும்பிய பிறகே, பிரதான சாலையின் நேர்க்கோட்டில் செல்ல வேண்டியுள்ளது.

இதுவும் கூடுதல் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல, கொண்டலாம்பட்டியில் இருந்து பட்டர்ஃபிளை பாலத்தை நோக்கி வரும்போதும், வழிகாட்டி பலகை தெளிவாக தெரியாமல், தினமும் பலர் தடுமாறிச் செல்லும் அவலமும் நீடிக்கிறது. எனவே, சர்வீஸ் ரோடு, பிரதான சாலையுடன் இணையும் இடத்தில் வாகனங்கள் சிக்கலின்றி எளிதாக செல்லும் வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும்.

மேலும், சர்வீஸ் சாலையின் நடுவில் வைக்கப்பட்டது போல இருக்கும் வழிகாட்டி பலகையை, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இந்நிலையில், சாலையின் மறுபுறம், பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் இருந்து, சேலம் நோக்கி இறங்கும் சாலையும், கீழேயுள்ள பிரதான சாலையுடன் இணையும் இடமும் போதிய அகலமின்றி உள்ளது.

இதனால், பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள், பிரதான சாலையில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களுடன் மோதும் ஆபத்து அதிகமாக உள்ளது. எனவே, பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் இருந்து இறங்கும் சாலை, பிரதான சாலையுடன் இணையும் இடத்தை அகலப்படுத்துவதுடன், போதுமான எச்சரிக்கை அமைப்புகளையும் அங்கே நிறுவ வேண்டும்.

வழிகாட்டி பலகை தேவை: கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் சேலம் பட்டர்ஃபிளை பாலத்தை அடைந்து, அதில் இருந்து சேலம் - சென்னை, சேலம் - பெங்களூரு, சேலம் - திண்டுக்கல் என 3 நெடுஞ்சாலைகளில் பிரிந்து செல்கின்றன. ஆனால், இவ்வாறு 3 தேசிய நெடுஞ்சாலைகள் பட்டர்ஃபிளை பாலத்தில் இருந்து பிரிந்து செல்வதை தெரிவிக்கும் வகையில், பட்டர்ஃபிளை பாலத்தின் மீது பிரம்மாண்டமான வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை.

பாலம் தொடங்குவதற்கு சிலநூறு மீட்டர் முன்பாகவே, வழிகாட்டி பலகை வைக்கப்பட்டால் தான், அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் வாகனங்கள், எவ்வித குழப்பமும் இன்றி, பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் உரிய பாதையை தேர்வு செய்து, தடுமாற்றமின்றி பிரிந்து செல்ல முடியும். எனவே, வழிகாட்டி பலகையை வைப்பதுடன், சாலையிலும் சில மீட்டர் தொலைவுக்கு முன்னரே வெள்ளைக் கோடுகளால் சாலை பிரிந்து செல்வது குறித்து குறியீடுகள் வரைய வேண்டும். போதுமான மின் விளக்குகள், இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x