Published : 30 Jun 2023 01:53 PM
Last Updated : 30 Jun 2023 01:53 PM

தீட்சிதர்களை கைது செய்ய போலீஸார் ஏன் தயங்குகிறார்கள்?: இரா.முத்தரசன் கேள்வி

தஞ்சாவூர்: வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை கைது செய்ய போலீஸார் ஏன் தயங்குகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர், “2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் அரசியல் ரீதியாக அணுக வேண்டும். பாஜக கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்துப் பேசி வாக்கு சேகரிக்க வேண்டும்.

ஆனால், கலவரத்தைத் தூண்டி வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்துடன் பாஜக செயல்படுகிறது. கலவரம் மூலமாக 3-வது முறையாக ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. மணிப்பூர் மாநில கலவரத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

பல்வேறு மதங்கள், ஜாதிகள் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமில்லாதது. ஆனால் இதை வைத்து கலவரத்தைத் தூண்ட பிரதமர் முயல்கிறார். இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மிகவும் ஆபத்தாகும்.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது நாள் முதல் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், முரண்பாடான கருத்துக்களைக் கூறி சர்ச்சைகளை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறார். சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தான் விரும்புகிற உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிக்கலாம் என அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால் செந்தில் பாலாஜி விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் வழங்கியது. ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு பிரச்சார பீரங்கியாகவும், சர்வாதிகாரி போலவும் செயல்படத் தொடங்கியுள்ளார். இது நல்லதல்ல. பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் இடையூறுகள், பிரச்சினைகளை ஏற்படுத்தி திசைத் திருப்புகிறார்கள்.

போலீஸார் மிரட்டியதால் பட்டுக்கோட்டை நகைக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு கொலையாகும். எனவே, அவரது குடும்பத்திற்குக் கருணை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். சிதம்பரம் கோயில் பிரச்சனையில் ஏறத்தாழ 200 தீட்சிதர்கள்தான் அராஜகம் செய்கின்றனர். இக்கோயிலில் அனைவரும் வழிபடுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றுதான் அறநிலையத் துறை கூறுகிறது.

இதைத் தடுக்கும் தீட்சிதர்களை போலீஸார் கைது செய்ய ஏன் தயங்குகிறார்கள். அந்த அளவுக்குத் தீட்சிதர்கள் செல்வாக்கு படைத்தவர்களா என்பது புரியவில்லை. எனவே, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். இக்கோயிலை தீட்சிதர்களின் பிடியிலிருந்து தமிழக அரசு மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் கடைமடை பகுதிக்குச் சென்றடையும். கடைமடைப் பகுதிக்கு முழுமையாகத் தண்ணீர் சென்ற பிறகு முறை பாசனம் வைக்கலாம். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையைக் குறித்து தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x