

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் 23 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தீவிர தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது.
நடப்பு மாதத்தின் முதல் 23 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 103 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதோடு, வீடுகள்தோறும் சென்று குடிநீர்த் தொட்டிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்கவும், தேவையற்ற பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.