

படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனைக்கு ஊழியர்கள் பற்றாக்குறை தான் காரணம் என தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புற வாயிலில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதனை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் கள உதவியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அரசு கூறுவது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டு பிரச்சனைக்கு ஊழியர்கள் பற்றாக்குறை தான் காரணம். உயர்பதவிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிவிட்டு மக்களை சந்தித்து களத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது எந்தவகையில் நியாயம்.
இதுபோல், நியமிக்கப்படும் ஊழியர்கள் 5 ஆண்டு பணியாற்றிவிட்டு அதன் பிறகு எப்படி குடும்பத்தை காப்பாற்றுவார். எனவே, ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்காமல் நிரந்தர வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினார்.