Published : 29 Jun 2023 02:31 AM
Last Updated : 29 Jun 2023 02:31 AM

விவசாயிகளுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய பயிற்சி நிலையம் - ரூ.1.50 கோடியில் மதுரையில் திறப்பு

மதுரை: குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பத்தை 36 மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 38 ஆண்டாக பயிற்சி அளித்து வரும் தமிழக வேளாண்மைத் துறையின் ஒரே பயிற்சி நிலையமாக மேலூர் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் திகழ்கிறது.

இங்கு இதுவரை 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சி நிலையத்திற்கு ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதியுடன் கூடிய புதிய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மதுரை மேலூர் விநாயகபுரத்தில் 1985ம் ஆண்டு முதல் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள சென்னை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் தவிர்த்து 36 மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வேளாண்மைத் துறையின் ஒரே பயிற்சி நிலையம் இது. ஆண்டுதோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள், நீர் மேலாண்மை, நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து 4 நாட்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.

விவசாயிகளோடு, வேளாண் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி உள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவகம் மூலம் ஆரோக்கிய உணவுகள், சிற்றுண்டிகள் மூன்று வேளை வழங்கப்படுகின்றன. கடந்தாண்டு வரை பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த பயிற்சி நிலையத்திற்கு மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (2020-21) ரூ.1.50 கோடியில் புதிய கட்டிடம் வேளாண்மை பொறியியல் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த பயிற்சி நிலையத்தின் அலுவலகம் தரைத்தளத்திலும், முதல் மாடியில் நவீன வசதிகளுடன் பயிற்சி அரங்கு, நூலகம் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ப.சுப்புராஜ், நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் மு.லட்சுமி பிரபா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முரேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் ஆ.ராணி, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, மற்றும் மேலூர் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் மு.லட்சுமி பிரபா கூறியதாவது: விவசாயத்தில் நீர் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் குறித்து விவசாயிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், அதற்கான கருவிகள் செயல்பாடு குறித்தும் செயல் விளக்கத்திடல் மூலம் பயிற்சி அளிக்கிறோம். இந்த மையத்தில், மழைநீரை சேமிக்கும் வகையில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பண்ணைக்குட்டை மூலம் ஒன்றரை லட்சம் லிட்டர் மழைநீர் அறுவடை செய்யப்பட்டு இங்குள்ள 7 ஆழ்துளை கிணறுகளில் சேமிக்கப்படுகின்றன.

சுமார் 40ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பயிற்சி நிலைய வளாகத்தில் அரசு விதைப்பண்ணை, உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ளதால் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் பயிற்சி பெறும் விவசாயிகள் அருகிலுள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறோம்.

செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மாவட்டந்தோறும் தெரிவு செய்யப்படும் 30 விவசாயிகளுக்கும், 6 வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சிபெற்ற விவசாயிகள் நீர் சிக்கனத்தை கடைபிடித்து மகசூல் ஈட்டி வருகின்றனர். தமிழகத்திலுள்ள சென்னை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் தவிர்த்து அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x