

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜூன் 28)சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.