Published : 25 Jun 2023 12:27 PM
Last Updated : 25 Jun 2023 12:27 PM

காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம்... காற்றோடு கரைந்த அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் இடநெருக்கடியுடன் செயல்படும் பேருந்து நிலையம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி 6 ஆண்டுகளாகியும் எந்தப் பணியும் தொடங்காமல் நிலுவையில் உள்ளது.

முதலில் கீழ் கதிர்பூரில் இடம் பார்க்கப்பட்டது. அது கை கூடவில்லை. பின்னர் சித்தேரி மேட்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. கடைசியாக காரப்பேட்டை - வெள்ளை கேட் பகுதிக்கு இடையேஇடம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது இறுதியாகுமா எனத் தெரியவில்லை.

அதாவது பஞ்சு குடோனில் இருந்து பருத்தி மூட்டைகளை ஓவ்வொரு இடமாக கொண்டு சென்று கடைசியில் பழைய பஞ்சு குடோனுக்கே பருத்தி மூடையை கொண்டு வைப்பது போல, புதிய பேருந்து நிலையத்துக்காக ஆங்காங்கே இடம் தேடி அலைந்து விட்டு கடைசியில் பழைய பேருந்து நிலையத்திலேயே தொடர்ந்து பேருந்துகள் கடும் நெரிசல் மிக்க நகரப் பகுதிக்குள் இயக்கப்பட்டு வருகின்றன என காஞ்சி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு திருவண்ணாமலை, வேலூர்,சென்னை, வந்தவாசி மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சென்னை செல்லும் பேருந்துகளை ஏகாம்பர நாதர் கோயில் தெரு, வெள்ளை கேட் வழியாக திருப்பி விடுகின்றனர். 4 கி.மீ மேல் சுற்றி செல்வதால் எரிபொருள் விரையம், நேர விரையம் ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் உள்ள சிப்காட்டில் பணியாற்றும் பலர் காஞ்சிபுரத்தில் குடியேறி வருவதால் அதிக போக்குவரத்து தேவை உருவாகியுள்ளது. கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுவதால் காஞ்சிபுரம் பேருந்து நிலையமும் இட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

இதற்காக ரூ.38 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க உடனடியாக அரசாணையும் வெளியிடப்பட்டது. பேருந்து நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் அனாதீனம் நிலம். சில விவசாயிகள் பயன்பாட்டில் இருந்ததால் அவர்கள் நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை கூட போடாமல் தடை ஏற்பட்டது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சித்தேரிமேடு, காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறும்போது, "காஞ்சிபுரம் மாநகரம் வளர்ந்து வருகிறது. தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அருகில் அதிகம் உருவாகியுள்ளதால் பலர் பேருந்துகளில் வந்து செல்கினர். தற்போது இருக்கும் பேருந்து நிலையத்தை மாநகருக்கு வெளியில் கொண்டு சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும்.

சென்னை - பெங்களூரு சாலைக்கு அருகே இந்த பேருந்து நிலையம் அமைவது சிறப்பாக இருக்கும். அதேபோல் மாநகருக்கு வெளியில் செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக காவல் உதவி மையம் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது ஆகியவற்றையும் செய்ய வேண்டும்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி மேயர் மகா லட்சுமியிடம் கேட்டபோது, "பேருந்து நிலையம் அமைக்க சித்தேரிமேடு, காரப்பேட்டை இரு இடங்களை தேர்வு செய்து காட்டியுள்ளோம். புதியஆட்சியரையும் சந்தித்து ஏற்கெனவே பேருந்து நிலைய விவகாரத்தில் இடம் பார்த்ததை தெரிவித்துள்ளோம். விரைவில் பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது ஏற்கெனவே இருந்த ஆட்சியர் மா.ஆர்த்தி காரப்பேட்டை பகுதியில் அண்ணா பல்கலைக்கழக பொறியில் கல்லூரிக்கும், வெள்ளைகேட்டுக்கும் இடையில் 10 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பி வைத்திருந்தார்.

அதன் பின்னர் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றனர். இந்த பேருந்து நிலைய விவகாரத்தில் ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், மற்றும் அரசியல் குறுக்கீடுகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாகவே இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாகவும் மக்களுக்கு பயனுள்ள இடத்தில் பேருந்து நிலையம் அமைய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x