Last Updated : 25 Jun, 2023 10:09 AM

1  

Published : 25 Jun 2023 10:09 AM
Last Updated : 25 Jun 2023 10:09 AM

புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க வீடு வீடாக சென்று விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்க்க உத்தரவு

திண்டுக்கல்: அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதிய வாக்குச் சாவடிகளை உருவாக்குவது, வீடு வீடாகச் சென்று விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக, வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்ததை அறியும் ‘விவி பேட்’ இயந்திரங் களின் இருப்பு, தேவைப்படும் இயந்திரங்களின் அளவு குறித்து ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

தற்போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, 1,100 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரித்து புதிய வாக்குச்சாவடியை உருவாக்குவது, வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக, அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு செய்து, புகைப்படத்துடன் விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட வசதியாக, வீடு வீடாக சென்று வாக்காளர்களின் இருப்பு நிலை, விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களின் பெயரை பட்டியலில் சேர்த்தல், இறந்த மற்றும் இடமாறுதலாகி சென்ற வாக்காளர்களின் பெயரை நீக்குதல், திருத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக தேர்தல், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x