Published : 24 Jun 2023 08:52 AM
Last Updated : 24 Jun 2023 08:52 AM

அதிமுக - பாஜக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தஞ்சாவூர்: பாஜக - அதிமுக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாபநாசத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 23) இரவு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிஹாரில் எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டம் போல், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் இதே கட்சியினர், இதே மாதிரியான கூட்டத்தை நடத்தி‌க் காட்ட வேண்டும்.

அங்கு மோடி அரசை எதிர்க்க வேண்டும் என ஒரே புள்ளியில் கூடியிருப்பவர்கள், ஒவ்வொருவரும் குடும்ப அரசியல், ஊழல் அரசியல் செய்து தங்களுடைய குடும்ப சுயநலத்துக்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு திறமையாக, நேர்மையாக, இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு மாற்றாக 16 பேர் அல்ல இன்னும் 100 பேர் சேர்ந்து வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. இந்திய மக்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு மட்டும் தான் உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட்டுகள், எத்தனைக் கட்சிகள், எத்தனை தொகுதிகள் என தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும். பாஜக - அதிமுக உறவில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x