Published : 24 Jun 2023 04:50 AM
Last Updated : 24 Jun 2023 04:50 AM

குறுவை தொகுப்பு திட்டம் | ரூ.76 கோடி நிதி ஒதுக்கி அரசாணை - 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, குறுவைத் தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.75.95 கோடி நிதி ஒதுக்கி தமிழக வேளாண் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குறுவைத் தொகுப்பை அறிவித்து வருகிறது. இந்த தொகுப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் செலவைக் குறைத்து அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 12-ம் தேதி, சேலத்தில் மேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தாண்டு ரூ.75.95 கோடியில் குறுவைத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, குறுவைத் தொகுப்புக்கான அரசாணையை தமிழக வேளாண் துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் அதிக பரப்பளவில் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், ரூ.75.95 கோடி மதிப்பில் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரம் முழு மானியத்திலும், 1.24 லட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப்படி சாகுபடித் தொகுப்பு, 6,250 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகள், 747 பவர் டில்லர்கள், 15 பவர் வீடர்கள் மானியத்தில் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

வேளாண் ஆணையர் கருத்துரு: இதுதொடர்பாக வேளாண் ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதில், இத்திட்டம், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றின் அனைத்து வட்டாரங்களிலும், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் டெல்டா வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.

திட்டத்தின்படி, 2.50 லட்சம் ஏக்கருக்கு 30 ஆயிரம் டன் உரங்கள் ரூ.61.65 கோடி மதிப்பில் 100 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும். நெல் விதைகளை பொறுத்தவரை, விதை கிராமத் திட்டத்தில் 2,000 டன்னும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் 478 டன்னும் என 2,478 டன் விதைகள் 50 சதவீத மானியத்தில் 1.29 லட்சம் ஏக்கருக்கு வழங்கப்படும்.

மாற்றுப்பயிர் சாகுபடி பரப்புக்குத் தேவையான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கான விதைகள் மாநில நிதி மூலம் 50 சதவீத மானியத்தில் 2.88 கோடியில் வழங்கப்படும். ரூ.50லட்சம் மதிப்பில் 6,250 ஏக்கர் பரப்புக்கான பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படும். 747 வேளான் இயந்திரங்கள் ரூ.6.44 கோடி மதிப்பில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இந்த குறுவை சாகுபடி திட்டத்தின் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, இந்த ஆண்டின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை ரூ.75.95 கோடி மதிப்பில் செயல்படுத்த நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. மேலும், 2.50 லட்சம் ஏக்கர் இலக்கில், 47,500 ஏக்கர் அதாவது 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகள், 2,500 ஏக்கர் பழங்குடியின விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை தொகுப்பு திட்டம் பற்றி முதல்வர் அறிவித்து 10 நாட்களுக்கு மேலாகியும் திட்டத்தை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. அரசாணையை விரைவில் வெளியிட்டு திட்டத்தை செயல்படுத்த டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்த செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x