Published : 22 Jun 2023 05:45 AM
Last Updated : 22 Jun 2023 05:45 AM

தொண்டுள்ளத்தோடு விஜய் வந்தால் வரவேற்கலாம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து

சென்னை: தமிழகத்தில் மட்டுமே ‘அரசியலில் நடிகர்கள்’ என்னும் சாபக்கேடு இருக்கிறது. தொண்டுள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள், விசிக தலைவர் திருமாவளவனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர். ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு அளித்து, திருமாவளவன் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற அனைத்து தரப்பினரின் கோரிக்கையை செயல்திட்டமாக மதிமுக மாற்றியுள்ளது. நாடு தழுவிய அளவில் அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங் கேற்க வேண்டும்.

கிண்டி மருத்துவமனை திறப்புவிழாவுக்கு வர ஒப்புதல் கொடுத்துவிட்டு வராததற்கான காரணத்தை கூற முடியாத அளவு நெருக்கடியில் இருக்கிறார் குடியரசுத் தலைவர். அவர் மீது அந்தளவுக்கு ஆதிக்கம் இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்பாதி கோயில் மூடப்பட்டுள்ளது. சாதி ஒழிப்புக்கான அரசாகதிமுக அரசைப் பார்க்கிறோம். இதற்கான கருத்தியல் போர் தொடர்ந்து நடக்கிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தில் பெரியார், அம்பேத்கரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். எந்தப் பருவத்திலும் பொதுவாழ்க்கைக்கு வரலாம், ஆனால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும்.

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் புகழ் இருந்தால் போதும் முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்த சாபக்கேடு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது வேலையை மட்டுமே செய்கின்றனர்.

தமிழகத்தில் மட்டுமே சினிமாவில் சந்தை மதிப்பு குறையும் நேரத்தில் அரசியலுக்கு வரலாம், மக்களைக் கவர்ந்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். அந்த எண்ணத்தோடு இல்லாமல் தொண்டுள்ளத்தோடு விஜய் வந்தால் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். புதுமுகங்கள் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் பதற்றம் இல்லை. ரஜினிகாந்த் போலவே அவருக்கும்ஊடக பிம்பம் கட்டமைக்கப்படு கிறது.

அதிமுகவை ஓரங்கட்டுவதுதான் பாஜகவின் அரசியல். பாஜக குழிவெட்டுவது திமுகவுக்கு அல்ல, அதிமுகவுக்கு. இது ஜெயக்குமார், பழனிசாமி உள்ளிட்ட யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் விழித்துக் கொண்டால் கட்சி நடத்தலாம். திராவிட இயக்கத் தன்மையில் இருந்து அதிமுக 90 சதவீதம் நீர்த்துப் போய்விட்டது. கொள்கையை காப்பாற்றும் திராணி அவர்களுக்கு இல்லை.

மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும்போது ஆய்வு செய்வதை விடுத்து, யோகா செய்ய வேண்டும் என பிரதமர் கூறுகிறார். அந்தமாநில ஆட்சியைத்தான் நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துரை வைகோ கூறும்போது, ‘‘பாஜகவின் அறிவிக்கப்படாத அதிகாரியாக ஆளுநர் செயல்படுகிறார். விரைவில் திமுக அரசு நீக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது அவரது விருப்பம். அது நடக்காது எனவும் சொல்ல முடியாது. இதனை சட்ட ரீதியாக திமுக எதிர்கொள்ளும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x