Published : 31 Oct 2017 03:57 PM
Last Updated : 31 Oct 2017 03:57 PM

தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியும் நண்பரும் கைது

சென்னை தேர்வில் காப்பியடித்ததாக ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக அவரது மனைவியும், நண்பரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நேற்று நடந்த ஐஏஎஸ் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகார் சபீர் கரீம் என்பவர் கலந்துகொண்டார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட சபீர் கரீம் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார், நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் ஐஏஎஸ் தேர்வுக்காக விண்ணப்பித்து நேற்று எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த எழுத்துத்தேர்வில் கலந்துகொண்டார்.

தேர்வு எழுதும்போது கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் திருட்டுத்தனமாக ப்ளூடூத் மாட்டிக்கொண்டு காப்பி அடிப்பது போல் தானும் ப்ளூடூத் அணிந்துகொண்டு மனைவியிடம் கேள்விக்கான விடையை கேட்டு எழுதினார். இதைக் கவனித்த அதிகாரிகள் அவரை கையுங்களவுமாக பிடித்தனர்.

தேர்வில் காப்பியடித்ததாக பிடிபட்ட ஷபீர் மீது மோசடி(420), கூட்டுச்சதி(120(பி)), 34 மற்றும் 66 ஐடி பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக, அவரது மனைவி ஜாய்சி ஜோசியும் மற்றொரு நண்பர் டாக்டர் ராம்பாபு என்பவரும் கைது செய்யப்பட்டார். இன்று ஹைதராபாத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ப்ளூடூத், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீமின் மனைவி கேரளாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் டாக்டர். ராம்பாபு டெல்லி மற்றும் போபாலில் எக்சலண்ட் ஐஏஎஸ் என்ற பெயரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வருகின்றனர்.

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப்பின் இருவரும் சிறையில் அடைக்கப்படுவர். கைது செய்யப்பட்ட சபீர் கரீம் ஐபிஎஸ் அதிகாரி என்ற முறையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை வருகிறது.

இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம். பின்னர் மத்திய அரசு அவரை முறைப்படி அவரது ஐபிஎஸ் பொறுப்பை பறிக்கும். ஐபிஎஸ் சர்வீசிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x