Published : 11 Oct 2017 06:24 PM
Last Updated : 11 Oct 2017 06:24 PM

டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டியது என்ன?- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம்

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் 500 வீடுகளாகவும், பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வீடுகள், 300 வீடுகளாக கொண்ட சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அதிகாரிகளிடம் விளக்கி கூறினார்.

* சுகாதாரமான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் குறைந்த பட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், கொட்டாங்கச்சி மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

* அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* மாநகராட்சி மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலிமனைகளில் சில இடங்களில் பொது மக்களால் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பை கூளங்களை, அவ்விடம் தனியார் இடம் என்றும் பாராமல் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* கொசுமுட்டை மற்றும் புழுக்களை ஒழித்திட தேவையான அளவு மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படின் உடனடியாக புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரை தொற்று நோய் ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* முக்கியமாக கைபிரதிகள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற ஏதுவாக சிறப்பு குழுக்கள் அமைத்து சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x