Published : 16 Oct 2017 07:00 PM
Last Updated : 16 Oct 2017 07:00 PM

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: சித்தராமையாவுக்கு திருமாவளவன் பாராட்டு

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரள அரசை பின்பற்றி கர்நாடகத்திலும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  வரவேற்கிறோம். கர்நாடக முதல்வருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேரள அரசு தலித் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. அது போலவே கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 35,000 தலித் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

மூடநம்பிக்கைகளை தடை செய்து சட்டம் ஒன்றை கர்நாடக அரசு அண்மையில் இயற்றியுள்ளது. சமூகநீதிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி வரும் கர்நாடக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போல பேராசிரியர் கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் ஆகியோரை மத அடிப்படைவாதிகள் படுகொலை செய்துள்ளனர். அந்த கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் கர்நாடக அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அர்ச்சகர் நியமனத்தில் கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றுவதற்கு கர்நாடக அரசு முன்வந்திருப்பதை போல தமிழக அரசும் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசும் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் முதலில் திமுக ஆட்சியின் போது இயற்றப்பட்டது என்ற போதிலும் அந்த சட்டத்தை அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரும் ஆதரிக்கவே செய்தார். எனவே, தற்போதுள்ள அதிமுக அரசு எவ்வித மனத்தடையும் இல்லாமல் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேதாகம பயிற்சி பெற்று நியமனத்திற்காக காத்திருக்கும் 206 பேரையும் உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x