

சென்னை: நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய லோக் அதாலத்தை தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக் குழு நடத்தியது. இந்த லோக் அதாலத், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதல் பேரிலும், மாநில சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாகத் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்பிரமணியம் மேற்பார்வையிலும் நடந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகர், ஜி.அருள்முருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.டி. சுமதி, என்.குணசேகரன், மாவட்ட அளவில் நீதிபதிகள், சார் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் தலைமையில் மொத்தம் 524 அமர்வுகள், வழக்குகளை விசாரித்தன. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வழக்கில் தொடர்புடைய இருதரப்பினர்களிடம் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டுவந்து முடித்து வைத்தனர். இதுகுறித்து மாநில சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் கூறும்போது, "தமிழகத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 501 வழக்குகள் இருதரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன. அதன்படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.982 கோடியே 18 லட்சத்து 99 ஆயிரத்து 358 கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான பி.கார்த்திகேயன் தலைமையில் தேசிய லோக் அதாலத் நடந்தது. இதில், மொத்தம் 17,840 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 15,948 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.172 கோடியே 82 லட்சத்து 4 ஆயிரத்து 543 கிடைத்துள்ளது" என்றார்.