Published : 24 Oct 2017 09:38 AM
Last Updated : 24 Oct 2017 09:38 AM

நாகை மாவட்டத்தில் அடுத்தடுத்து பயங்கரம்: அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது - தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மேற்கூரையின் சிமென்ட் காரை நேற்று பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவு கட்டிடத்தில் நேற்று காலை மேற்கூரையில் உள்ள சிமென்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது, அந்த இடத்தில் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்த இந்தப் பகுதியில்தான் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டப்பட்ட இக்கட்டிடம் 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனைக்குச் சென்று கட்டிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடனடியாக அந்த இடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை, வழக்கம்போல மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லலாம் என எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் பொறையாறில் கடந்த 20-ம் தேதி அதிகாலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள ஓய்வறைக் கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து மறுநாள் (அக்.21) நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேற்கூரையில் உள்ள சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x