Published : 09 Oct 2017 09:26 AM
Last Updated : 09 Oct 2017 09:26 AM

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் 3 பெண்கள் உட்பட சென்னையை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு: வேறு இரு விபத்துகளில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட சென்னையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

சென்னை நங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு ஒரு காரில் சென்றனர். காரை சென்னை வடபழனியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த விபத்தில் பிரசாந்த், நங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ், இவருடைய மனைவி உமா, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், இவருடைய மனைவி சுகுணா, உறவினர் மீனா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த அனிஷா என்பவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள் நவீன கருவிகளின் உதவியுடன் காரின் முன்பகுதியை வெட்டி எடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர்.

போலீஸார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தினால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாணவர்கள் பலி

சேலம் கருப்பூரை அடுத்த சின்ன வெள்ளாளப்பட்டி அடுத்த கோபிநாதபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் விக்னேஷ்வரன்(18). அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஷ்(18). இவர்கள் இருவரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்களும், கோபிநாதபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரான குமார் மகன் ஸ்ரீதர்(17) மற்றும் சக்கரைசெட்டிப்பட்டியைச் சேர்ந்த பாலு மகன் ரஞ்சித்(19) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 4 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் கோபிநாதபுரத்தில் இருந்து வெள்ளாளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விக்னேஸ்வரன் ஒட்டினார். வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகே வளைவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் திரும்பியபோது, அங்கிருந்த வேகத்தடையில் மோதி சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது மோதியது.

இதில், விக்னேஷ்வரன், விக்னேஷ், ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ரஞ்சித், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சேலம் சூரமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அருகே 3 பேர் பலி

கோவை அருகே வெள்ளகோவில் குறுக்கத்தி பகுதியில் ஆம்னி வேன் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கணவன், மனைவி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாயினர்.

பேன்சி கடை நடத்தி வரும், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சண்முகம்(42). தனது மனைவி மரகதம்(40), மகன் அபிலேஷ்(12) ஆகியோருடன் திருப்பூர் நோக்கி செல்லும்போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x