மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ் முதல் மணிப்பூர் நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 17, 2023

மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ் முதல் மணிப்பூர் நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 17, 2023
Updated on
2 min read

தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அரசு அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி: இபிஎஸ் கேள்வி: செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின் முக்கிய எதிர்க்கட்சியை மிரட்டுவதைக் கைவிட வேண்டும். இனியும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டுக்கான துரோக வரலாறுதான் பாஜகவுக்கு இருக்கிறது”: பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை ‘பிரதமர்களின் அருங்காட்சியகம்’ என பாஜக அரசு பெயரை மாற்றியிருப்பதைவ் விமர்சித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

200-வது நாளை எட்டிய கரும்பு விவசாயிகளின் போராட்டம்: திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனான 300 கோடி ரூபாயை முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்து வரும் போராட்டம், சனிக்கிழமை 200-வது நாளை எட்டியது. இதில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில் கரும்புடன் தொடர் முழக்கப் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டனர்.

‘சமவாய்ப்பற்ற, சிபிஎஸ்இ பாடமுறைக்கு சாதகமான நீட் தேர்வை நீக்குக’: நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில், அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது உறுதியாகியுள்ளது என்றும், அதனால் சமவாய்ப்பற்ற, சிபிஎஸ்இ பாடமுறைக்கு சாதகமான நீட் தேர்வை நீக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’ - நடிகர் விஜய் பேச்சு: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் பள்ளிப் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு, சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசுகையில், "கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம்தான் இது” என்றார்.

மேலும், “இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலிச் செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால், சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்" என்றார்.

பாஜக மாநிலச் செயலாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: ட்விட்டரில் பொய்ச் செய்தி பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா 15 நாள் நீதிமன்றக் காவலில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சில நாட்களுக்கு முன்பு

எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் கள்ள மெளனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார்.

‘இது பொய்யான தகவல். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவரை கைது செய்தனர்.

சென்னையிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்து வந்த போலீஸார், அவரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது’: வர்த்தக அமைப்பான அசோசெம் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபேஸ்-ன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் | குறிவைக்கப்படும் அரசியல்வாதிகள்: மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கலவரங்களில் அரசியல்வாதிகளை வன்முறை கும்பல்கள் தொடர்ந்து குறிவைத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பெலாரஸுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்த ரஷ்யா: உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in