

மதுரை: ட்விட்டரில் பொய்ச் செய்தி பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா 15 நாள் நீதிமன்றக் காவலில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் கள்ள மெளனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார்.
‘இது பொய்யான தகவல். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னையில் நேற்றிரவு அவரை கைது செய்தனர். சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னையிலிருந்து சூர்யாவை இன்று காலை மதுரைக்கு அழைத்து வந்த போலீஸார், அவரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி வீட்டில் சூர்யாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, மதுரை பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் நீதிபதி வீடு அமைந்திருக்கும் பாரதி உலா வீதியில் கூடினர். போலீஸாரை கண்டித்து சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். | வாசிக்க > எஸ்.ஜி.சூர்யா கைது விவகாரத்தில் வார்த்தைப் போர் - நிர்மாலா சீதாராமன் கண்டனமும், சு.வெங்கடேசன் பதிலும்