Published : 26 Oct 2017 08:21 AM
Last Updated : 26 Oct 2017 08:21 AM

கந்தசஷ்டியை முன்னிட்டு சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

கந்தசஷ்டியை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கடலில் கோட்டை கட்டி ஆண்டுவந்த சூரபத்மன் என்ற அசுரனை முருகப் பெருமான் வதம் செய்ததையடுத்து, திருச்செந்தூரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு பின்னர் கடைபிடிக்கப்படும் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபடுவர். அதேபோல, தமிழகத்தில் உள்ள பிற முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

சிறப்பு பூஜைகள்

இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோயில், பூக்கடை கந்தகோட்டம், குன்றத்தூர் முருகன் கோயில், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோயில், குரோம்பேட்டை குமரக்குன்றம் கோயில், சோழிங்கநல்லூர் முருகன் கோயில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த கோயில்களில் நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனை காண ஏராளமான பக்தர்கள் கோயில்களில் திரண்டனர். காலையில் இருந்து விரதம் கடைபிடித்த பக்தர்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டனர். கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று, முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x