Published : 15 Jun 2023 05:10 PM
Last Updated : 15 Jun 2023 05:10 PM

ரூ.230 கோடி, 15 மாதங்கள், உயர் சிகிச்சைகள்...- கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சிறப்பு அம்சங்கள்

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை

சென்னை: சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி செலவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 20 உயர் சிறப்பு துறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள், 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக, அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால் மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வராததால், இந்த மருத்துவமனையை வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள்:

15 மாதங்கள்: கடந்த 2021-ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே மருத்துமனை திறக்கப்படுகிறது.

6 தளங்கள்: 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 'ஏ' பிளாக் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கும். 'பி' பிளாக் ரூ.78 கோடியில் 18,725 சதுர மீட்டர் பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கும். 'சி' பிளாக் 15,968 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.74 கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

23 துறைகள்: இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், புற்றுநோய், ரத்த மாற்று தொடர்பான உயர் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படவுள்ளன.

பணியாளர்கள்: கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இணைப் பேராசிரியர்கள் 30 பேர், உதவிப் பேராசிரியர்கள் 100 பேர் என்று ஆக மொத்தம் 130 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தனியாக ஓர் இயக்குநர், இரண்டு உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட உள்ளனர். இதைத் தவிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தை மேற்கொள்ள புதியதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x