Published : 25 Oct 2017 12:32 PM
Last Updated : 25 Oct 2017 12:32 PM

கொடுவாய் அருகே முறைகேடாக மது பதுக்கி விற்ற மதுபானக்கூடம் சூறை

திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் முறைகேடாக மதுவிற்றதாகக் கூறி, மதுபானக் கூடத்தை பொதுமக்கள் நேற்று சூறையாடினர்.

அப்பகுதியினர் கூறியதாவது: திருப்பூர் அருகே கொடுவாய்- பொள்ளாச்சி சாலையில் சக்தி விநாயகபுரம் உள்ளது. இங்கு கடந்த மூன்று மாத காலமாக டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைய எதிர்ப்பு தெரிவித்தோம். இது தொடர்பாக பலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. டாஸ்மாக் கடை செயல்படாத நேரங்களில் மதுபானக் கூடத்தில் மது பாட்டில்களை பதுக்கி, முறைகேடாக தொடர்ந்து விற்று வந்தனர். அதிகாலை நேரங்களில் மது வாங்கி குடிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

நேற்று காலை கடை திறக்கும் முன்பு, மதுபானக்கூடத்தில் மது விற்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது உரிய பதில் அளிக்காமல் மிரட்டினர். இதில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த மதுபாட்டில்கள் கொண்ட 2 பெட்டிகளை உடைத்து நொறுக்கினர். மதுபானக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர் என்றனர்.

அவிநாசி பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பல்லடம் டிஎஸ்பி முத்துசாமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், மதுவிற்பனை தராளமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டினர். அப்பகுதியினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுபானக்கூடத்தில் இருந்த இருவரை பொதுமக்கள் தாக்கியதாகக் கூறி, அவிநாசிபாளையம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x