Published : 31 Oct 2017 09:56 AM
Last Updated : 31 Oct 2017 09:56 AM

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பின் செயலாளரான கதிர்மதியோன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதுடன் உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரங்களில் உள்ள அனைத்து சாலைகளின் நடுவிலும், சாலைகளின் குறுக்கிலும், குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பர பலகைகளில் வண்ணமயமான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், சாலை பாதுகாப்பு விதிகளின்படி சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் விதமாகவும் விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது. எனவே, குறைந்தபட்சம் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள விளம்பர பலகைகளையாவது உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் எதையுமே கண்டுகொள்வதில்லை.

தனியார் நிறுவனங்களிடம் உள்ளாட்சி அமைப்புகளும், காவல்துறையினரும் பணம் பெற்றுக்கொண்டு, விளம்பர பலகைகளை சாலைகளின் குறுக்கே அந்தரத்தில் தொங்க விடுகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள், சந்திப்புகள், சிக்னல்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். அதேபோல அந்த இடங்களில் புதிதாக விளம்பரங்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைக்க தடை விதித்தது. ஏற்கெனவே விளம்பரம் வைக்க அனுமதி கொடுத்திருந்தால் அனுமதி காலம் முடிந்த பின்னர் அவற்றை அகற்ற வேண்டும் என்றும், அந்த அனுமதியை மீண்டும் புதுப்பிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x