பிரதமராக பொறுப்பேற்கும் தகுதி வாய்ந்த தமிழர் பழனிசாமி - கிருஷ்ணகிரியில் அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி : இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கும் தகுதி தமிழர் பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என கிருஷ்ணகிரியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலப்பள்ளி, பட்லப்பள்ளி ஊராட்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை பூமி பூஜை செய்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் காலத்தில், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை பாஜக மட்டுமே ஏற்படுத்தும் என பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

எம்ஜிஆர் அதற்காகத்தான் அஇஅதிமுக என்கிற கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் தற்போது பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதராண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தது போல இந்தியாவையும் திறமையுடன் ஆட்சி செய்வார். இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர், பழனிசாமிதான். அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அவரது கருத்தை நாங்கள் ஏற்கிறோம்.

பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் போற்றும் அளவுக்கு சிறப்பான ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார், கலாச்சாரத்தை எங்கும் பேசி நம்மை தொடர்ந்து பெருமைப்படுத்துகிறார். பாஜக அரசு கடந்த, 9 ஆண்டுகளில் என்ன செய்தது எனக் கேட்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த காலக்கட்டத்திற்கு முன், 18 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது என்ன செய்தது என்று கூறட்டும். நீட் தேர்வை அப்போது எதிர்க்காமல் இப்போது விலக்கு ஏற்படுத்துவோம் என கூறி வருகின்றனர். கடந்த, 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செய்தோம் என திமுகவினர் கூறுவது வெட்ககேடு; வேதனை. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in