Published : 12 Jun 2023 09:12 PM
Last Updated : 12 Jun 2023 09:12 PM

மருத்துவப் படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வு அறிவிப்பும் எதிர்வினைகளும்!

சென்னை: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை, இளநிலைப் படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுத் தரப்பிலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவர்கள் சங்கத்தினரும் தங்களது எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பும் அதற்கான எதிர்வினைகளையும் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

மத்திய அரசு கலந்தாய்வு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலைப் படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜி எச்எஸ்) ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.

மத்திய அரசின் சுற்றறிக்கை: இந்நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதி,மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு, ஆன்லைன் மூலம் பொது கலந்தாய்வு நடத்தமுடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு,அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

7.5% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு: சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: "பொதுக் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்களிப்பை குறைப்பது என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, பொதுக் கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை மீறும் வகையிலான அறிவிப்புகள் ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா முடிந்ததும் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். பொதுக் கலந்தாய்வு நடந்தால் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சலுகைகளும் பாதிக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

69% இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து: "தமிழகத்தில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனியாக 69 சதமான இடஒதுக்கீடு கொள்கை அமலாக்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பெற வாய்ப்புள்ளது. மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையால் இத்தகைய இடஒதுக்கீட்டு முறை பறிக்கப்பட்டு ஒரு சில உயர் மருத்துவக் கல்லூரிகளில் உயர்சாதியினரும், இரண்டாம் தர, மூன்றாம் தர மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., மாணவர்கள் பயிலும் மோசமான நிலை ஏற்படும்" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பு நிராசையாகும் வாய்ப்பு: "எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன.எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15% இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் மருத்துவ கவுன்சிலிங் என்பது ஓர் ஊழல்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, "திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் கூறுகிறார், "நாங்கள் எப்படி மருத்துவ கலந்தாய்வை நடத்துவோம் என்றால், நாங்கள் முதலில் மெரிட் பட்டியலை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வோம். எந்த குழந்தைகளுக்கெல்லாம் நூறு சதவீதம் மருத்துவ இடம் கிடைக்குமோ, அந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வில் ஒரு இடத்தை வழங்கிவிடுவோம். அந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தவுடன் அங்கிருந்து சென்றுவிடுவார்கள். அந்தக் குழந்தை போனதால், காலியாகும் இடத்தை நாங்கள் வெளியே விற்றுவிடுவோம். இதுதான் எங்களுடைய டெக்னிக்" என்று பேசியிருந்தார். அதனால்தான் திமுகவினர் குறிப்பாக 2006லிருந்து 2011 வரையிலான ஆட்சியில், மிக அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதற்கு முன் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஓர் அசிங்கமான ஊழல். அது ஊழல் நிறைந்த ஒரு கலந்தாய்வு.

இது ஆற்காடு வீராசாமியே கூறியிருக்கிறார், கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும் அவர் பேசியிருக்கிறார். கருணாநிதி என்னைச் சென்று தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைவர்களை பார்க்கச் சொல்வார் அதனால், நான் சென்று பார்ப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிரார். திமுகவில் யாருக்காவது தைரியம் இருந்தால் இதை பொய்யென்று நிரூபிக்க வேண்டும். நான் அரசியலை விட்டேச் சென்றுவிடுகிறேன். எனவே இந்தியாவைப் பொருத்தவரை, அனைத்து கலந்தாய்வுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் ஒரு ஏழைத்தாயின் மகனும், விவசாயியின் மகனும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நீட் கொண்டு வரப்பட்டது" என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்: "ஏற்கெனவே, 2017 முதல் DM மற்றும் MCh போன்ற உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 100 விழுக்காடு இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை உரிமையை ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது. தற்பொழுது ,நெக்ஸ்ட் (NEXT) என்ற தேர்வு மூலமும், ஒன்றிய அரசே 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்துவதின் மூலமும் ,மாநில உரிமைகளை முற்றாகப் பறிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு, அருந்ததியர் மற்றும் முஸ்லீம் உள் ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதே போல் தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படும் மேற்கண்ட இட ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படலாம்" என்று செய்தியாளர்களைச் சந்தித்த, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x