Published : 04 Oct 2017 10:52 AM
Last Updated : 04 Oct 2017 10:52 AM

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு பற்றி விளக்கம் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு வரும் வரை 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகள் காலி என அறிவிக்க கூடாது என ஏற்கனவே அறிவித்திருந்தது. சட்டபேரவையையும் கூட்டதடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து எதிராக செயல்பட்டதாக கொறடா பரிந்துரை பேரில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்தார், இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு கடந்த செப்.20 விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, அரியமா சுந்தரம் உள்ளிடோர் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி என்று அறிவிக்கக் கூடாது என்றும், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பையும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

மேலும் ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என்ற தடை மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று தெரிவித்த நீதிபதி , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை செயலர் பூபதி, அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வரும் அக்.4 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டதில் நீதிபதி துரைசாமிக்கு பதில் ஹரிசந்திர பாபு இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இன்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் வழக்கில் தீர்ப்பளிக்கப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது பின்னர் தெரியவரும்.

முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் தரப்பினர் தனி அணியாக இயங்கிவருகின்றனர். தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்திருந்தனர். பேட்டியும் அளித்து வந்தனர்.

இது குறித்து அரசு கொறடா விளக்கக் கடிதம் அனுப்பிய பின்னர் சட்டப்பேரவை தலைவருக்கு பரிந்துரை செய்த அடிப்படையில் 19 பேருக்கு சபாநாயகர் 7 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் ஜக்கையன் மட்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டிருந்த நிலையில் சட்டப்பேரவை தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x