Published : 20 Oct 2017 08:10 AM
Last Updated : 20 Oct 2017 08:10 AM

திமுக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில் கட்சி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 65 மாவட்டச் செயலாளர்கள், 6 மாநகரச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரை முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்’ என பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். அத்துடன் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள எழுச்சி யாத்திரை குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x