Published : 14 Oct 2017 06:50 PM
Last Updated : 14 Oct 2017 06:50 PM

கண்காணிப்பு கேமராக்கள் விவகாரம்: தகவல் கேட்ட சமூக ஆர்வலருக்கு டிஜிபி அலுவலகம் விநோத பதில்

தமிழகத்தில் இதுவரை எத்தனை காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் பொருத்தப்பட்டது செலவு எவ்வளவு செய்யப்பட்டது எந்த நிறுவனம் பொருத்தியது டெண்டர் எப்போது விடப்பட்டது? போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் கேட்டபோது, மழுப்பலான புரியாத பதில் டிஜிபி அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தமிழகத்தில் காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பற்றிய விபரங்களை கேட்டு சமூக ஆர்வலர் சிவ இளங்கோ தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்திருந்தார். அதற்கு இரண்டு மாதம் கழித்து டிஜிபி அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேட்ட கேள்வியும் அதற்கு டிஜிபி அலுவலக உதவி பொதுத்தகவல் அலுவலர் அளித்த பதிலும் கீழே:

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேள்வி:

”தமிழகத்தில் இதுவரை எத்தனை காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. (மாவட்ட வாரியாக இடங்களின் பெயர்) எந்தெந்த தேதிகளில் பொருத்தப்பட்டது செலவு எவ்வளவு செய்யப்பட்டது எந்த நிறுவனம் பொருத்தியது டெண்டர் எப்போது விடப்பட்டது?

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2(J) (1) படி நேரில் பார்வையிட அனுமதி வேண்டுகிறேன்”.

கடிதத்திற்கு டிஜிபி அலுவலகம் சார்பில் அதன் உதவி பொதுத்தகவல் அதிகாரி அளித்த பதில்:

பார்வையில் கண்ட தங்களுடைய மனுவிற்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.

”வணிகத்தின் நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துடைமை உள்ளிட்ட எந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினர் ஒருவரின் சந்தையில் போட்டியிடும் நிலைக்கு தீங்காகுமோ அந்தத் தகவலை கொடுக்க வேண்டியதில்லை.

அதற்கு தகவலின் வெளிப்படுத்துகையானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு நியாயமானதாக உள்ளது என்று தகுதியும் வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவடைந்தாலின்றி மற்றபடி அந்தத் தகவலை கொடுத்தல் கூடாது, எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8(1)(d)- ன் படி தங்களுக்கு வழங்க இயலாது என்ற விபரம் அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டது குறித்து தகவல் தருவது வணிகத்தின் நம்பகத்தன்மையும், வியாபார ரகசியத்தையும் பாதிக்கும் விஷயம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய சிவ இளங்கோவிடம் தி இந்து சார்பில் கேட்ட போது அவர் கூறியதாவது:

எதற்காக இத்தகைய தகவலை கேட்டீர்கள், என்ன பதில் கிடைத்தது?

”தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது கண்காணிப்புக் கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற செய்தி வந்தது. அதையடுத்து காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் ஏன் பொருத்தப்படவில்லை. அல்லது பொருத்தப்பட்டு செயல்படாமல் இருக்கிறதா என்று அறிய விபரம் கேட்டோம்.

நாங்கள் கேட்டது ஜூலை.11 2017 ஆனால் எங்களுக்கு பதிலளித்தது செப்டம்பர் மாத கடைசியில். இது போன்ற ஒரு பதிலை அளிக்க இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு டெண்டர் விடப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் சொன்னால் வியாபார ரகசியம், அறிவுசார் சொத்துடமை என்றெல்லாம் விநோத விளக்கம் கொடுப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்” என்றார்.

டிஜிபி அலுவலக உதவி பொதுத்தகவல் அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமாரிடம் 'தி இந்து' தமிழ் சார்பில் விளக்கம் கேட்க முயன்ற போது தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியிடம் இது குறித்து கேட்ட போது கண்காணிப்பு கேமரா குறித்து பதிலளித்தது பற்றி தனக்கு தெரியாது, நாங்கள் சட்டம் ஒழுங்கு பணி பற்றி பார்க்கிறோம், இது பற்றி விசாரிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளித்தால் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x