Published : 20 Oct 2017 12:48 PM
Last Updated : 20 Oct 2017 12:48 PM

பறவைகள் இன்றி வெறிச்சோடியது வெள்ளோடு சரணாலயம்: 15 ஆண்டுகளுக்குப் பின் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

வறட்சியால் வெள்ளோடு பெரிய ஏரியில் நீர் இல்லாத நிலையில், இந்த ஆண்டு பறவைகளின் வருகை இன்றி சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. பறவைகள் வரத்து இல்லாததால் 15 ஆண்டுகளுக்குப் பின் சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரி 215 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு பறவைகள் வெள் ளோடு சரணாலயத்திற்கு வருவது வழக்கம்.

மஞ்சள் மூக்கு நாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட நம் நாட்டு பறவைகளுடன், வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து, சில மாதங்கள் தங்கி இனப் பெருக்கம் செய்யும் இடமாக வெள்ளோடு விளங்கியது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும், பெலிகான் என்ற வகைப்பறவைகள் நான்கு மாதம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தங்கியிருந்து, இனப்பெருக்கம் செய்தபின், பிப்ரவரியில் தங்களது ஊர்களுக்கு பயணமாகி வந்தன. இந்த காலகட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் பறவைகள் வெள்ளோடு வந்து சென்றுள்ளன.

கடந்த இரு ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சியால், வெள் ளோடு பறவைகள் சரணாலய ஏரி, போதிய நீர் இன்றி வறண்டது. இதனால் மீன்களின் எண்ணிக் கை குறைந்து பறவைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், ஏரி யில் மீன்களை உணவாக கொள்ளும் மீசைக்கொளுத்தி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இத்தகைய மீசைக்கொளுத்தி மீன்களை பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், பெரிய ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டன.

தற்போது பெய்த மழையில் பெரிய ஏரியில் குறைந்த அளவே நீர் தேங்கியுள்ளது. அத்துடன், பறவைகளின் உணவான மீன்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளன. இதனால், இந்த ஆண்டு வெள்ளோடு சரணாலயம் பறவைகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கடந்த காலங்களில், பறவைகளின் அமைதியை குலைக்கக்கூடாது என்ற நோக்கோடு, வெள்ளோடு சரணாலயத்தை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், புங்கம்பாடி, மீனாட்சிபுரம், செல்லப்பன்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் தீபாவளியின்போதும், இதர கோயில் திருவிழாக்களின் போதும் வெடி வெடிப்பதை முற்றிலுமாய் தவிர்த்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பழக்கத்தை, பறவைகள் வரத்து குறைவால் இந்த ஆண்டு கைவிட்ட கிராம மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் கிராமத்தை நாடி வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பறவைகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதற்காக தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதை நிறுத்தி இருந்தோம். இந்த ஆண்டு பறவைகள் வரத்து முழுமையாக இல்லாததால், பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினோம். அடுத்த ஆண்டு, பறவைகள் வரத்து அதிகம் இருந்தால், மீண்டும் பட்டாசு வெடிப்பதை நிறுத்திக் கொள்ள தயாராக உள்ளோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x