Published : 31 Oct 2017 04:50 PM
Last Updated : 31 Oct 2017 04:50 PM

மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடற்பகுதியில் அழிவின் விளிம்பில் கடல் குதிரைகள்

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் குதிரைகள் சூழல் மாசுபாட்டாலும், அதிக அளவில் வேட்டையாடப்படுவதாலும் அரிதாகி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பரப்பில் பவளப் பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் அரிதான கடல் வாழ் உயிரினங்கள் ஏராளமாக இங்கு காணப்படுகின்றன. உலகில் 33 வகையான கடல் குதிரைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் இங்கு மட்டும் ஐந்து வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன.

ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட குதிரை மீன், குறிப்பாக அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடல் குதிரை என்று அழைக்கப்படுகிறது. கடல் குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றியவை. அவற்றின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே.

கடல் குதிரைகள், அலங்கார மீன்களாக வளர்க்கப்படுகின்றன. அலங்கார மீன் வணிகத்தில் கடல் குதிரை மட்டுமே ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர்களை ஈட்டித் தருகிறது. மேலும் கடல் குதிரைகள் மருத்துவப் பயன்பாட்டுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு கடல் குதிரையிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், கடல் குதிரைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.

அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகளை வேட்டையாட மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இருப்பினும், தொடர்ந்து கடற்குதிரைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு கடற்குதிரைகளை பார்ப்பதே அரிதாகவிடுமோ என்று இயற்கை ஆர்வலர் கள் வேதனையடைந்துள் ளனர்.

இது குறித்து கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கூறியதாவது:

தனுஷ்கோடியிலிருந்து தூத்துக்குடி வரையிலுமான மன்னார் வளைகுடா கடற்பகுதியிலும், நாகப்பட்டினத்திலிருந்து ராமேசுவரம் கச்சத்தீவு உள்ளிட்ட பாக். ஜலசந்தி கடற்பகுதியிலும் கடல் குதிரைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

சுமார் 5 செ.மீ முதல் 15 செ.மீ வரையிலான உயரமும், மூன்றிலிருந்து இருபது கிராம் வரையிலுமான எடையிலும் கடல் குதிரைகள் இருக்கும்.

பெண் கடல் குதிரை வெளியிடும் முட்டைகளை ஆண் கடல் குதிரை தனது உடலில் உள்ள இனப்பெருக்கப் பையில் பெற்றுக்கொண்டு அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கும். இதுபோன்ற சிறப்பு உலகில் வேறெந்த உயிரினத்துக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 150 முதல் 500 குஞ்சுகள் வரை வெளிவரும்.

கடல் குதிரைகளை காய வைத்து அதனை தேனில் நனைத்து குழந்தைகளுக்கு மருந்தாகவும், தேங்காய் எண்ணெயில் கலந்து பெரியவர்களின் வெட்டுக் காயங்களுக்கும் மீனவ மக்கள் முன்பு பயன்படுத்தி வந்தனர்.

உலக அளவில் மருத்துவ தேவைகளுக்காகவும் அலங்கார மீன்களாகவும் வளர்ப்பதற்காக கள்ளச் சந்தைகளில் இவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் தற்போது கடல் குதிரைகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன, என்றார்.

இந்நிலையில் கடல் குதிரைகளின் எண்ணிக்கை அரிதாக வருவதால் அவற்றை நடுக்கடலில் பண்ணைகள் அமைத்து பெருக்க முடியுமா என்று ராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x