Published : 24 Oct 2017 08:29 PM
Last Updated : 24 Oct 2017 08:29 PM

பாரதமாதா கோயில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி அனந்தனை விடுதலை செய்ய வேண்டும்: அன்புமணி

பாரதமாதா கோயில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி அனந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முயன்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தியவாதியுமான குமரி அனந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காந்தியடிகளின் வழியில் போராட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். இதற்காக தியாகி சுப்பிரமணியசிவா நீண்ட காலமாக போராடினார். அவரைத் தொடர்ந்து காந்தியவாதி குமரி அனந்தன் அறவழியில் போராடி வருகிறார். இதற்காக ஆறாவது முறையாக காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நடைபயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் இன்று காலை பாப்பாரப்பட்டி சென்றடைந்தார். அங்கு தமது கோரிக்கையை வலியுறுத்தி சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாரதமாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 94 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்காக குமரி அனந்தன் 6 முறை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகும் பாரதமாதா கோயில் கட்டப்படாததால் தான் தமது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். இது அநீதியானதாகும். உடனடியாக பெரியவர் குமரி அனந்தனை விடுதலை செய்வதுடன் அவரது கோரிக்கையை ஏற்று பாரதமாதா கோயிலை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x