

மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தொடரும்: முதல்வர் உறுதி: "கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த அரசும் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்றுதான் கூறி வந்தது. அப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். அதேநிலையில்தான் எங்களுடைய ஆட்சி இன்றைக்கும் உள்ளது. கருணாநிதி எப்படி அந்த விஷயத்தில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
‘தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை’: தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சில விஷயங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பைக் என்பது தனி நபர் பயன்படுத்தும் வாகனம். வாடகைக்கு விடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. பைக் டாக்ஸிகளை பயன்படுத்த கூடாது என்பது தமிழக அரசின் நிலை. காவல் துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
‘அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்களை நிறுவக் கூடாது’: தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் அமைகிறது ராக்கெட் ஏவுதளம்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் அமைந்துள்ள SSLV வளாகத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. இதன்படி, ரூ.18 கோடி செலவில் இந்தக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு: இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 14-ல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
‘செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றும்’ - பிரதமர் மோடி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த சாம் ஆல்ட்மேன் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், "இந்தியாவில் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
‘மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை’: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின்போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக்குப் பதிவு செய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவிற்கு டெல்லி போலீசார் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தனது வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளதாக அவரது மகளும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும், மத்திய உள்துறை அமைச்சரும் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வெள்ளை மாளிகையிலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில், அரசு ஆவணங்களை எடுத்தது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.