Published : 09 Oct 2017 09:19 AM
Last Updated : 09 Oct 2017 09:19 AM

மருத்துவமனையில் 2-வது நாளாக சந்திப்பு சசிகலாவுடன் சைகையில் பேசிய நடராஜன்

சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை சசிகலா நேற்று 2-வது நாளாக பார்த்தார். அப்போது சைகையில் சசிகலாவுடன் நடராஜன் பேசியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோலில் சென்னை வந்து தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் (அக்.7) பெரும்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று கணவர் நடராஜனை பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

நேற்று மீண்டும் கணவர் நடராஜனைப் பார்க்க தி.நகரில் இருந்து பகல் 11.10 மணியளவில் மருத்துவமனைக்கு காரில் சசிகலா புறப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சசிகலாவுக்கு கோட்டூர்புரம், தரமணி, சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

மருத்துவமனைக்கு 11.40 மணிக்கு சசிகலா சென்றார். அவருடன் உறவினர் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, இளைய மகள் ஷகிலா, மகன் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2005-ம் எண் கொண்ட அறையில் உறவினர்களுடன் சசிகலா பேசிக் கொண்டிருந்தார். கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை பார்க்க பகல் 12.45 மணிக்கு சசிகலா உறவினர்களுடன் சென்றார். அந்த அறையில் பகல் 1.30 மணி வரை சசிகலா இருந்தார். செயற்கை சுவாசத்துக்காக கழுத்துப் பகுதியில் ‘டிரக்யாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டிருந்ததால் நடராஜனால் பேச முடியவில்லை. இதனால் சைகை மூலம் பேசினார். பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சசிகலா காரில் வீட்டுக்குப் புறப்பட்டார். பகல் 2.50 மணிக்கு தி.நகர் வீட்டுக்கு வந்தார்.

அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நேற்று முன்தினம் இரவு தி.நகர் வீட்டுக்கு வந்து சசிகலாவை சந்தித்துவிட்டுப் போனார். நேற்று காலையில் வீட்டுக்கு அவர் வரவில்லை. சசிகலாவுடன் மருத்துவமனைக்கும் செல்லவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x