Last Updated : 23 Oct, 2017 08:37 AM

 

Published : 23 Oct 2017 08:37 AM
Last Updated : 23 Oct 2017 08:37 AM

தள்ளாத வயதிலும் தளராத மன, உடல் வலிமை: தடகளத்தில் பதக்க வேட்டையாடிய மூத்த வீரர்கள்; அரசு தரப்பில் உதவி கிடைப்பதில்லை என ஆதங்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று வழக்கம் போல தடகளப் போட்டிகள், விளையாட்டு வீரர்கள், உற்சாகம், கைதட்டல், பரிசளிப்பு என இருந்தது. ஆனால், போட்டியில் பங்கெடுத்த வீரர், வீராங்கனைகளே அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். ஆம், வீரர், வீராங்கனைகள் பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள். விளையாட்டின் மீதான ஆர்வத்தால் வயதைப் பொருட்படுத்தாமல் பதங்க வேட்டையில் இறங்கியிருந்தனர்.

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மூத்தோர் தடகளப் போட்டியில் கோவை மட்டுமல்ல, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர். 35 வயதிலிருந்து 90 வயது வரையிலான 310 பேர் இதில் பங்கெடுத்தனர். அதில், ஆண்கள் 250 பேர், பெண்கள் 60 பேர். ஓட்டத்தில் 100, 200, 400, 800 1500, 5000 மீட்டர், 5 கி.மீ. நடை, தடை தாண்டு ஓட்டம், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் அநாயசமாக சாதித்து வெற்றிகளை குவித்தனர்.

மாவட்ட அளவிலான இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள், டிசம்பர் 9,10-ம் தேதிகளில் கரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும், அதில் வெல்பவர்கள் 2018, பிப்ரவரியில் பெங்களூருவில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.

இதில் பங்கேற்ற பீளமேட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தாமணி (70), சரஸ்வதி (75) ஆகியோர் கூறும்போது, ‘நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று வருகிறோம். பள்ளிப் பருவத்திலேயே தடகளத்தில் ஆர்வம் அதிகம். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்துள்ளோம். அந்த ஆர்வம் இன்று வரை குறையவில்லை. வயதானாலும் மன, உடல் வலிமை குறையவில்லை’ என்றனர்.

கணபதியைச் சேர்ந்த டி.பாலன் (64) கூறும்போது, ‘12 வயதிலிருந்து தடகளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன். மூத்தோர் போட்டியில் மட்டும் 12 ஆண்டுகளாக பங்கேற்கிறேன். இதில், இந்தியா சார்பாக ஜப்பான், மலேசியாவில் நடந்த ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியிலும், மலேசியாவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்று வென்றுள்ளேன். வயதானாலும் விளையாட்டில் ஆர்வம் குறையாத பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், ஊக்குவிப்பு குறைவு. மற்ற நாடுகளில் மூத்தோர் தடகள வீரர்களுக்கு முக்கியத்துவம் அதிகம். ஆனால் போட்டியில் பங்கேற்க கூட நாம் தான் செலவு செய்ய வேண்டியுள்ளது. மூத்தோர் தடகளம் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x