

தமிழகத்தில் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே “சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது சாதிய பாகுபாடு புகார்: மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தற்போதைய தமிழக சுகாதாரச் செயலாளருமான ககன் தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு இரண்டு பக்க புகார் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
“தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு...” - முதல்வர் ஸ்டாலின்: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தின் இளைய சக்தியை உலக நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைப்பு: அமைச்சர்: தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடங்கியுள்ள நிலையில், பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இந்திரா காந்திக்கு அவமதிப்பால் சர்ச்சை: கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் நடந்த ஊர்வலக் காட்சி வெட்கக்கேடானது என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, கனடா தூதரக அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கண்டனத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“உ.பி. படுகொலைகள்”- அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி: “உத்தரப் பிரதேசத்தில் தொடரும் படுகொலைகள் உங்களுக்கு கவலை தரவில்லையா?” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், உத்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காவல்துறை விசாரணைக் கைதிகளின் கொலைகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் 2017 முதல் 2022 வரை காவல் துறை விசாரணையில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி: தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் வியாழக்கிழமை தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும்.
இதற்காக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்," ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
‘ராகுலின் வெளிநாட்டுப் பேச்சு தேச நலனுக்கு ஏற்றதல்ல’: "ராகுல் காந்தி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்போதெல்லாம் இந்தியாவை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நாட்டுக்கு வெளியே நாட்டின் அரசியல் குறித்துப் பேசுவது நாட்டு நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியாது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு: சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சி மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக ஆய்வு நடத்தப்படவிருக்கிறது. அந்த ஆய்வு முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்திவிடும் என்று அவர் கூறினார்.
நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை: நியூயார்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் அங்கு மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.