

சென்னை: சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து, அதில் சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் போன்ற சிறிய அளவிலான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தொடர்பான தாக்கீதுகளை அனுப்பியிருந்தார்கள்.
நமது துறையின் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் அடங்கிய குழுவை டெல்லிக்கு அனுப்பி விளக்கம் தெரிவிக்கப்பட்டது. தற்போது கோடைக்காலம் என்பதால் மருத்துவர்கள் அவர்களுக்கென்று இருக்கின்ற விடுமுறைகளை பயன்படுத்தி வெளியில் செல்வது வழக்கம், எனவே, இதற்காக ஒரு கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சரியாக இருக்காது என்றெல்லாம் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேசிய மருத்துவ ஆணையக் குழு கடந்த இரண்டு நாட்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும், காணொளிகள் மூலமும் ஆய்வும் செய்தனர். இதன்மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் அனுப்பிய தாக்கீதுகள் திரும்ப பெற்றுக் கொண்டு, இக்கல்லூரிகள் அங்கீகாரம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கு தடையில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்கான எழுத்துபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும். திருச்சி மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை நாளை காணொளி வாயிலாக ஆய்வு நடத்தப்படவிருக்கிறது. அந்த ஆய்வு முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்திவிடும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அரசு ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு இளநிலை மருத்துவ வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் காரணமாக இந்தக் கல்லூரிகள் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.