“தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். ஏனெனில்...” - அன்புமணி

“தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். ஏனெனில்...” - அன்புமணி
Updated on
1 min read

சென்னை: “தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் முதல் உயர்த்தப்படுவதாகவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு 4.7 விழுக்காட்டிற்கு மாற்றாக 2.18% என்ற அளவிலேயே இருக்கும் என்றும், அதையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதால் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இருக்காது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின் கட்டண உயர்வு என்ற பெரும் சுமையிலிருந்து வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிக்கிறது.

10 மாதங்களில் இரண்டாவது முறையாக செய்யப்படவிருக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று முதன்முதலில் நான்தான் கடந்த 4-ம் நாள் வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று வீடுகளுக்கான மின்சாரக் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அவற்றுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை கண்டிப்பாக தாங்கிக் கொள்ள முடியாது. ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதி மின்கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இந்த பாதிப்புகளைப் போக்க கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வை திணிப்பது எந்த வகையிலும் சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது.

தொழில் நிறுவனங்கள் வேறு வழியின்றி தாங்கிக் கொள்கின்றன என்பதற்காக அவற்றின் மீது தொடர்ந்து கட்டண உயர்வு சுமை சுமத்தப்பட்டுக் கொண்டே இருந்தால், அவை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் முறிந்து விடும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது. அதைக் கருத்தில் கொண்டு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in