Published : 08 Jun 2023 06:43 PM
Last Updated : 08 Jun 2023 06:43 PM

நீலகிரி மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு: குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து

குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது

குன்னூர்: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

கோடை சீசன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மலை ரயிலில் இடம் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. நீலகிரிக்கு சுற்றுலா வரும் பலரும் மலை ரயில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த மலை ரயிலில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பயணம் செய்து மகிழ்ந்தார். இந்நிலையில், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நீலகிரி மலை ரயில் புறப்பட்டது.

தண்டவாளத்தில் இருந்து இறங்கிய மலை ரயிலின் கடைசிப்பெட்டியின் சக்கரங்கள்

ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் சென்றதும் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. இதனால், ரயில் முன் நோக்கி செல்லாமல் நின்றது. ரயிலை நிறுத்திய ரயில்வே ஊழியர்கள், ரயிலை ஆய்வு செய்தபோது, மலை ரயிலின் கடைசிப் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது தெரியவந்தது. இதனால், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில் குன்னூர் ரயில் நிலையம் அருகிலேயே தடம் புரண்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. ரயிலில் பயணித்த 175 பேரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, சிறப்பு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரியமான நீலகிரி மலை ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x