Published : 08 Oct 2017 08:24 AM
Last Updated : 08 Oct 2017 08:24 AM

தினசரி பெட்ரோல் விலை நிர்ணயத்துக்கு எதிர்ப்பு: அக்.13-ல் பெட்ரோல் பங்க் வேலைநிறுத்தம்

பெட்ரோலுக்கு அன்றாட விலை நிர்ணயம் செய்யும் முறை மற்றும் வீடு தேடி பெட்ரோல் விநியோகம் செய்யும் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்வதால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், டீலர்களுக்கான மார்ஜின் தொகையை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால், அதன்படி மாற்றியமைக்கப்படவில்லை. அதேபோல், பெட்ரோலிய பொருட்களைக் கையாளுவதால் ஏற்படும் இழப்பீடு, போக்குவரத்தில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரைத் தீர்க்கவில்லை.

இந்நிலையில், வீடுகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு சென்று நேரடியாக விநியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இதன்படி, அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x