Published : 24 Oct 2017 02:33 PM
Last Updated : 24 Oct 2017 02:33 PM

ஈரோட்டில் கடனுக்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற தொழிலாளி: மனைவியின் புகாரால் பரபரப்பு

 ஈரோட்டில் கடன்தொகையை திருப்பிச் செலுத்த முடியாததால் நெசவுத் தொழிலாளி தனது சிறுநீரகத்தை விற்க முயற்சிக்க, மனைவி அளித்த புகாரின் பேரில் கேரளாவிலிருந்து போலீஸார் கணவனை மீட்டு அழைத்து வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி சம்பூரணம். இவர் ஈரோடு ஆட்சியரிடம் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில் சிறுநீரகம் விற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவரை மீட்டுத்தர கோரிக்கை விடுத்திருந்தார். நெசவுத் தொழிலாளி ரவியை இடைத்தரகர் கேரளாவுக்கு அழைத்துச் சென்றதாகவும், ரூ.5 லட்சத்துக்கு சிறுநீரகத்தை விற்க தனது கணவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்றும் கணவரை மீட்டுத்தருமாறும், ஈரோடு ஆட்சியர் பிரபாகரிடம் மனைவி சம்பூரணம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் அளிக்கப்பட்ட நேரத்தில் நெல்லையில் தீக்குளிப்புச் சம்பவம் நடந்ததால், ஈரோட்டில் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவரின் சிறுநீரகத்தை கடன் கொடுத்தவர்கள் கேட்டு கேரளாவிற்கு அழைத்துச் சென்றதாக பரபரப்பு எழுந்தது.

இதையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஈரோடு எஸ்பி சிவகுமாரிடம் தகவல் அளிக்க, கேரளாவிற்கு தகவல் கொடுத்து, உடனடியாக சிறுநீரகம் கொடுப்பதை தடுத்து நிறுத்தி, ரவியை ஈரோடு அழைத்து வர எஸ்.பி உத்தரவிட்டார். அதன் பேரில் அங்குள்ள போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரவி ஈரோடு அழைத்து வரப்படுகிறார்.

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி. சிவகுமாரிடம் 'தி இந்து' தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

கடன் வாங்கியவர் சிறுநீரகம் கொடுக்க நிர்பந்தப்படுத்தப்படுவதாக ஈரோட்டிலும் புது புகார் வந்துள்ளதே, கந்து வட்டி பிரச்சினைதான் காரணமா?

இது கந்துவட்டி பிரச்சினை இல்லை. நெல்லையில் கந்துவட்டி பிரச்சினையில் தீக்குளிப்பு நடந்தவுடன் இந்தப் புகாரையும் கந்து வட்டி பிரச்சினையில் சேர்த்து விட்டார்கள்.

கந்துவட்டி பிரச்சினையில் கடன் தொகைக்காக கிட்னியை கொடுக்க வேண்டும் என்று அழைத்துச்சென்றதாக சொல்கிறார்களே?

அது தவறான தகவல், ரவி கடன் வாங்கி உள்ளார். கடன் தொகையை கட்ட முடியாமல் கஷ்டப்படுவதால் புரோக்கர் மூலம் தனது கிட்னியை விற்க முடிவெடுத்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு அவரே புரோக்கருடன் சென்றதாக தகவல். அவர் மனைவிக்கு இதில் விருப்பம் இல்லை. அதனால் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கிட்னியை விற்க கடன் கொடுத்தவர்கள் நிர்பந்தப்படுத்தி அழைத்துச்சென்றதாக புகார். இது உண்மையா?

அப்படி புகார் இல்லை. அவர் மனைவியும் அப்படி புகார் அளிக்கவில்லை. கடன் பிரச்சினை அதிகம் ஆனதால் தனது கணவர் கிட்னி விற்கும் புரோக்கர் மூலம் தனது கிட்னியை விற்க விலை பேசி கேரளாவிற்குச் சென்றுள்ளார். அவரை மீட்டுத்தாருங்கள். நாங்கள் உழைத்து கடனை அடைக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

புகார் வந்தவுடன் ஆட்சியர் உடனே எனக்கு வாட்ஸ் அப்பில் அதை அனுப்பி வைத்தார். எர்ணாகுளம் சென்ற ரவியை மீட்க எர்ணாகுளம் டிஎஸ்பியுடன் பேசி சிகிச்சையை நிறுத்தச் சொல்லி இங்கிருந்து போலீஸாரை அனுப்பி, ரவியை மீட்டு அழைத்து வரச்சொல்லி இருக்கிறேன்.

இங்கு வந்த பின்னர் ரவியிடம் நடக்கும் விசாரணையின் முடிவில் தான் கிட்னி முறைகேடாக விற்க முயற்சி நடந்ததா? வேறு எதுவும் பிரச்சினை உள்ளதா? என தெரியவரும் அதன் பின்னரே நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஈரோடு எஸ்.பி சிவகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x