Published : 07 Jun 2023 05:05 PM
Last Updated : 07 Jun 2023 05:05 PM

போதைப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு: இந்தியா முழுவதும் ட்ரை சைக்கிளில் பயணம் தொடங்கிய இரு மதுரை இளைஞர்கள்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்திலிருந்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ட்ரை சைக்கிளில் புறப்பட்ட நண்பர்கள் பி.சிராஜ்தீன், ரா.அருண்குமார். | படம்: நா.தங்கரத்தினம்.

மதுரை: போதைப்பழக்கம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதன் அவசியம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை இளைஞர்கள் சிராஜ்தீன், அருண்குமார் ட்ரை சைக்கிளில் பயணத்தை தொடங்கினர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த நண்பர்கள் பி.சிராஜ்தீன் (23), ரா.அருண்குமார் (23). இதில் சிராஜ்தீன் எம்பிஏ படித்துள்ளார். ரா.அருண்குமார் எம்சிஏ படித்துள்ளார். சமூக அக்கறையுடையுடன் மதுரையில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பழக்கம், சிறுமியர், பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரமும், உலக சுற்றுச் சூழலை காக்க மரங்கள் நடுவதன் அவசியம், நாட்டில் ஒற்றுமை ஏற்பட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதும் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு மதுரை ஜெய்ஹிந்துபுரத்திலுள்ள வீரகாளியம்மன் கோயிலிலிருந்து ட்ரை சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ட்ரை சைக்கிளில் பயணத்தை தொடங்கிய நண்பர்கள் பி.சிராஜ்தீன், ரா.அருண்குமார் கூறியதாவது: ''தனிமனிதன் மாறினால்தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது போதைப்பழக்கம், பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மனிதநேயம் குறைவதும், மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாதுமே இப்பிரச்சினைகளுக்கு காரணம். மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் பயணிக்கவுள்ளோம். இதற்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாக டிரை சைக்கிளை தேர்ந்தெடுத்தோம்.

இதற்காக ட்ரை சைக்கிள் வாங்கி 6 மாதம் பயிற்சி எடுத்தோம். உணவின்றி, தண்ணீரின்றியும் சைக்கிள் இயக்குவதற்கு பயிற்சி எடுத்து உடலை தயார்படுத்தியுள்ளோம். செல்லும் வழிநெடுகிலும் விதைப் பந்துகள் தூவவுள்ளோம். மரக்கன்றுகள் நட்டு இரும்புவேலியும் அமைக்கவுள்ளோம். ஒரு நாளைக்கு 150 கிமீ செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் 18 ஆயிரம் கிமீ சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். மேலும், ஓவியங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வுள்ளோம். எங்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் என்பதால் இந்தியா முழுவதும் தைரியமாக சென்றுவருவோம்.

மதுரையிலிருந்து திண்டுக்கல், கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி , உத்தரகாண்ட், பீகார் உள்பட இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவுள்ளோம். வருங்கால தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழவும், நல்ல சமுதாயத்தை உருவாக்குவதுமே எங்களது பயணத்தின் நோக்கம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x