Last Updated : 07 Jun, 2023 06:35 PM

 

Published : 07 Jun 2023 06:35 PM
Last Updated : 07 Jun 2023 06:35 PM

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி

வைத்திலிங்கம் எம்.பி. | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் உடனடியாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''மத்தியில் ஆளும் பாஜக அரசு ராகுல் காந்தி பேசியதை காரணம் காட்டி நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று, அவருக்கு தண்டனை கொடுத்து அவரின் எம்.பி பதவியை பறித்ததைப் போல ஒரு கொடுமையான செயல் இன்றைய தினம் புதுச்சேரியில் நடந்து கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் பேசக்கூடியதை, பேசப்பட்டதை வெளிப்படையாக பேசுவதுதான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கடமை. அந்தக் கடமையை ஆற்றிய சுயேட்சை எம்எல்ஏ நேரு மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கொடுமையான செயல்.

கடந்த காலத்தில நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, கிரண்பேடி ஆளுநராக இருந்த நேரத்தில் மக்களின் கருத்தை எடுத்து கூறிய அதிமுக அன்பழகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர் குரல் ஒலிக்க காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது. ஆனால், இன்றைய புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி, மோடி எப்படி எதிர்த்து பேசினால் வழக்குகளை பதிவு செய்து, அடக்கு முறையை கையாண்டு மிரட்டுவாரோ அதைப்போன்ற நடவடிக்கைகளைத்தான் செய்கிறது. இது மக்களின் குரலை நசுக்கக் கூடிய செயல்.

புதுச்சேரியில் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையும், சரியான குடிநீர் வசதியும் இல்லாத நிலை உள்ளது. எங்கும் உப்புநீராக, குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் 10, 12 மணி நேரம் மின்வெட்டு. கிராமங்களில் மழையால் ஏற்பட்ட மின் தடைகள் சரி செய்யாமலேயே உள்ளது. அதேபோல் மின்சாரத்தை நம்பியுள்ள தண்ணீர் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இவைகளை சரி செய்ய நினைக்காத அரசாங்கம், எடுத்துச் சொல்லும் எம்எல்ஏ மீது மிக வேகமாக நடவடிக்கையை எடுக்கிறது.

மத்தியில் ஒரு மோடி, புதுச்சேரியில் ரங்கசாமி, நமச்சிவாயம் என 2 மோடிகள் உள்ளனர். புதுச்சேரி மக்களின் குரலை ஒடுக்கும் நிலை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமலேயே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வைத்தியநாதன் மற்றும் என்னுடைய வேண்டுதலும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகளை உடனடியாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத உள்ளேன். மதுபான கொள்கையில் உள்ள தவறை ஆளுநரே ஒப்புக் கொண்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லாதபோது முன்னாள் ஆளுநர் கிரண்பேடி மதுபான தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு மூடினார். ஆனால் தற்போதைய ஆளுநர் மீண்டும் தொடங்க அந்த மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தந்தார். கிரண்பேடி கூறியது சரியா, தற்போதைய ஆளுநர் கூறியது சரியா என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரி ஆளுநரின் செயல்பாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறி உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாட்டின் விளக்கம் பெற வேண்டியது எம்.பிக்களின் உரிமை. ஆனால் அதை கிடைக்க செய்யாமல் முழுமையாக தடுத்து நிறுத்தும் அரசாக ரங்கசாமி அரசு உள்ளது. ஸ்மார்ட் சிட்டியில் மாநிலத்தின் பங்களிப்புதான் அதிகம். மத்திய, மாநில அரசின் மொத்த பங்களிப்பு ரூ.252 கோடிதான். மேகதாது அணை விவகாரத்தில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை முதலில் கூறட்டும். புதுச்சேரி அரசு சரியாக சொல்லாவிட்டால் நாங்கள் சொல்லுவோம். இவ்விகாரத்தில் கர்நாடக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் என்ன பேச்சுவார்த்தை என்று தெரியாது'' என்றார். பேட்டியின்போது வைத்தியநாதன் எம்எல்ஏ உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x