Published : 10 Oct 2017 01:11 PM
Last Updated : 10 Oct 2017 01:11 PM

குட்கா ஊழலை மறைக்க குதிரை பேர அரசில் எத்தனை எத்தனை முயற்சிகள்?- ஸ்டாலின் சாடல்

குட்கா ஊழலை மறைக்க குதிரை பேர அரசில், கடைநிலை முதல் உயர் நிலை அதிகாரிகள் வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வருமான வரித்துறை முதன்மைப் புலனாய்வு இயக்குநர் அவர்களின் கடிதத்தில், "தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட 40 கோடி ரூபாய் குட்கா மாமூல் பற்றிய விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு டி.ஜி.பி.க்கள் ஆகியோரின் பெயர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், இடைநிலை மற்றும் கடை நிலை போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது" என்றும் இன்றைய ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.  

உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்ட ஓர் ஊழல் புகாரில், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் எந்தளவிற்கு அலட்சியமாகவும், ஊழல் புகாரில் சிக்கியுள்ள டி.ஜி.பி. மட்டத்திலான அதிகாரிகளையும், அமைச்சரையும் காப்பாற்றுவதற்கும் துணை போயிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது. குட்கா ஊழலை மறைக்க குதிரை பேர அரசில் எத்தனை எத்தனை முயற்சிகள்? 

வருமானவரித்துறை முதன்மை இயக்குனரின் கடிதமே எங்களுக்கு வரவில்லை என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்பே சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் தலைமைச் செயலாளர். வருமான வரித்துறைக் கடிதத்தை மறைக்க ஊழல் புகாருக்கு உள்ளான கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. பெயர்களை விடுவித்து விட்டு ஒரு கடிதம் எழுதப் பணிக்கப்பட்டார். வருமான வரித்துறையின் கடிதத்தை விசாரிக்க முற்பட்ட டி.ஜி.பி. அசோக் குமார் நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இன்னொரு கூடுதல் கமிஷனர் அருணாசலம் இரவோடு இரவாக திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். 

பிறகு, அந்தக் கடிதம் யாரிடம் கொடுக்கப்பட்டது, எந்தத் தேதியில் கடிதத்தைப் பெற்றுக் கொண்டற்கான ஒப்புகை, தலைமைச் செயலக அதிகாரிகளிடம் பெறப்பட்டது என்றெல்லாம் வருமான வரித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டபோது, அதுபற்றி தலைமைச் செயலாளர் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தார். ஊழல் கோப்பையை காணாமல் அடித்த அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மறைத்ததோடு, ரூ.40 கோடி ஊழல் புகாரில் வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்ட டி.கே.ராஜேந்திரனை தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்து, இரு வருடங்கள் பணிநீட்டிப்புச் செய்ய தலைமைச் செயலாளரே முன்னின்று முழு ஆதரவும் கொடுத்தார். 

இது போன்றதொரு சூழ்நிலையில், சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை, "குட்கா விசாரணையைக் கண்காணிக்க சுதந்திரமான விஜிலென்ஸ் ஆணையரை நியமிக்க வேண்டும். குட்கா புகாரில் உள்ள அமைச்சரோ, டி.ஜி.பி.யோ, மற்றவர்களோ விசாரணையில் எவ்வித குறுக்கீடும் செய்யக்கூடாது" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகும் கூட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. 

மாமூல் புகாருக்குள்ளான டி.ஜி.பி. ஜார்ஜ் பணியிலிருந்தே ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். மீதியிருக்கின்ற டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயரை, முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல், கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் பெயர்களை மட்டும் சேர்த்துள்ளார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற வேண்டிய விசாரணை, தன் கண் முன்னால் உருக்குலைக்கப்படுவதை தலைமைச் செயலாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  

நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்தாமல் இருப்பதற்காக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு டி.ஜி.பி. அந்தஸ்தில் இயக்குனர் நியமிக்கப்படாமல், திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருகிறது. குட்கா ஊழல் விசாரணையில் டி.ஜி.பி.யோ மற்ற அதிகாரிகளோ குறுக்கிடக் கூடாது என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையிலும், புகாருக்குள்ளான டி.ஜி.பி. மீதோ, அமைச்சர் மீதோ லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு கண்மூடித்தனமான குறுக்கீடு குட்கா விசாரணையில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. 

இதுபோன்ற, மிகவும் கடுமையான ஊழல் குற்றங்களில் புகார் கொடுத்தால், முதல் தகவல் அறிக்கை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று, லலிதா குமாரி வழக்கில் ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிற்கு உதவி செய்து, தடை செய்யப்பட்ட குட்கா தங்குதடையில்லாமல் விற்பனை செய்யப்படுவதற்குத் துணை போன புகாரில், வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி.க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூட முதுகெலும்பு இல்லாத துறையாக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை மாற்றப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது. 

தனியாக விஜிலென்ஸ் கமிஷனர் நியமிக்கப்பட்ட பிறகும் நிலைமையில் எவ்வித மாற்றமும் இல்லை. விஜிலென்ஸ் கமிஷனரும் இந்த விசாரணை அலங்கோலங்களை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கண்காணிப்பதாக தெரியவில்லை. ஊழல் ஒழிப்புத்துறையின் சுதந்திரமே மொத்தமாகப் பறிபோவதை, தலைமைச் செயலாளர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, குதிரை பேர முதலமைச்சருடன் சேர்ந்து அவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவது, அவர் தலைமையிலான நிர்வாகத்தின் வினோதமான காட்சிகளாக இருக்கிறது. 

ஆகவே, லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை டி.ஜி.பி மற்றும் அமைச்சர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்குத் தடையாக இருப்போர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, மாநில விஜிலென்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குட்கா விசாரணையை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கண்காணிக்கும் பொறுப்பை, விஜிலென்ஸ் ஆணையரிடம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கொடுத்திருப்பதால், இந்த நடவடிக்கை மிக அவசியமானது என்று விஜிலென்ஸ் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x