Last Updated : 21 Oct, 2017 04:30 PM

 

Published : 21 Oct 2017 04:30 PM
Last Updated : 21 Oct 2017 04:30 PM

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு ரத்து: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பழைய கட்டணமே தொடரும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணத்தை உயர்த்தி கடந்த 17-ம் தேதி அரசு அறிவித்தது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயக்கப்படும் நகர சேவை பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ.5ஆகவும், அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.2க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

விரைவு அல்லாத நிலை நிறுத்த பேருந்துகளுக்கு முதல் 6 கி.மீ. வரை உள்ள தூரத்திற்கு ரூ.8க்கு மிகாமலும், விரைவு பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. தொலைவுக்கு ரூ.25-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கோரிமேடு செல்ல ரூ.9-ம், புதுச்சேரி – காலாப்பட்டுக்கு ரூ.14, புதுச்சேரி – திருக்கனூருக்கு ரூ.20, புதுச்சேரி – வில்லியனூருக்கு ரூ.14 என பொதுமக்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ரூ.20ம், விழுப்புரத்திற்கு ரூ.26ம், திண்டிவனத்துக்கு ரூ.24ம் வசூலித்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பேருந்து கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி திமுக, அதிமுக சார்பில் முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏ சிவா, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது,

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அனைத்து எம்எல்ஏக்களும் என்னை சந்தித்து குறை கூறினார்கள். இதையடுத்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைத்து பேசி கருத்துகளை கேட்டேன்.

இந்நிலையில் பொதுமக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரது கருத்தும் ஒத்துப்போகிறது. எனவே, அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்பி, எம்எல்ஏக்கள் இடம் பெறுவார்கள். இக்குழு பேருந்து உரிமையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி, 3 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை அடிப்படையில் புதிய கட்டணத்தை அமல்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதுவரை பழைய கட்டணமே தொடரும். இதற்கு பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x