

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியிலும் தமிழகத்தைபோல் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14-ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சனிக்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு நடந்த இரண்டு நாட்களுக்குள் முன்னணி வீராங்கனையான சாக்ஷி மாலிக், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சாக்ஷி "நான் போராட்டத்தில் இருந்து விலகியதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவும் மாட்டோம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்" என சாக்ஷி ட்வீட் செய்துள்ளார்.
பிடிபட்டது அரிசிக்கொம்பன் யானை!: தேனி மாவட்டத்தில் ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில நாள்களாக அரிசிக்கொம்பன் யானை சுற்றித் திரிந்தது. ஊருக்குள் புகுந்த யானை அட்டகாசம் செய்தது. இந்த யானையைப் பிடிக்க வனத் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்நிலையில், அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி திங்கள்கிழமை அதிகாலை வனத் துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட அரிசிக்கொம்பன் யானை மிகுந்த பாதுகாப்புடன் வனத்துறை லாரியில் ஏற்றப்பட்டு திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து பின்னர், கேரளா வனப்பகுதிக்குள் மேகமலை பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக க.அறிவொளி நியமனம்: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக க.அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக மு.பழனிச்சாமி என 5 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்: மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் முதன்மை பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்து கல்லூரி 2-வது இடத்தையும், சென்னையில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரி 3-வது இடத்தையும், கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
மதுவால் தொடரும் உயிர் பலி: அரசுக்கு அண்ணாமலை கேள்வி: “கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என்று வேலூர் மாணவியின் தற்கொலையை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா? என்று பாமக. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
170 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு தகவல்: ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா திங்கள்கிழமை மாலையில் தெரிவித்துள்ளார்.
ஒடிசா அரசு தனது சொந்த செலவில் உடல்களை அவரவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் என்றும், உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூடிய விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே "ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன்? - கார்கே: ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், சாமானிய இந்திய மக்களின் முக்கிய வாகனமாக ரயில்வேதான் திகழ்கிறது. இந்தியன் ரயில்வே மலிவானது. ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் தற்போது மிகவும் முக்கியம்; மேம்போக்கான மாற்றங்கள் அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? - தமிழக பாஜக கேள்வி: "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு காரணத்தையும், காரணமானவர்களையும் நீதியின் முன் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சிபிஐயும் விசாரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதை எதிர்பார்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதே நம் கேள்வி?" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
‘பாஜக எல்லா பிரச்சினைக்கும் வரலாற்றின் மீதே பழிபோடும்’: நாட்டில் எந்தப் பிரச்சினை நிகழ்ந்தாலும் அதற்கு காங்கிரஸ் மீதே பாஜக பழி சொல்லும். ஒடிசா ரயில் விபத்தைப் பற்றிக் கேளுங்கள், 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி என்று காரணம் சொல்வார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி யாராக இருந்தாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலங்களையே குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னொருவர் மீது பழிபோட்டுவிட்டு தப்பிப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.