

சென்னை: "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு காரணத்தையும், காரணமானவர்களையும் நீதியின் முன் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சிபிஐயும் விசாரிப்பதில் எந்தத் தவறும் இல்லை .அதை எதிர்பார்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதே நம் கேள்வி?" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில் விபத்து ஏற்பட்டால் நீதிபதி குழு விசாரணைதான் அமைக்க வேண்டும் என்றும், ஆனால் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது என்றும், ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் தவறை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருப்பது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது. தொடர்ந்து இதுபோன்று தவறான தகவல்களைத்தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் வெங்கடேசன்.
2010-ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் ஜனனேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டபோது பதறித்துடித்து, முடியாது என்று அன்றைய மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு மறுத்தது ஏன்? அந்த விபத்து குறித்து சிபிஐ விசாரித்து மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்ததும், இன்று வரை வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் வெங்கடேசனுக்கு தெரியுமா?
அதேபோன்று இப்போதும் சிபிஐ விசாரணை தேவையில்லை என கம்யூனிஸ்டுகள் அலறுவதுதான் சந்தேகத்தை வரவழைக்கிறது. யார் செய்த தவறை மறைக்க அன்று சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள்? இன்று வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள்?
அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , சிபிஐ என்பது குற்றங்களைக் கண்டுபிடிக்கத்தான் உள்ளதே தவிர, விபத்துகளை அல்ல என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 2010-ம் ஆண்டு ஜனனேஸ்வரி ரயில் விபத்துக்கு சிபிஐ விசாரணை அளித்தது ஏன்? அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யாதது ஏன்? அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கு வங்க மாநில அரசை சிபிஐ விசாரணைக்கு வற்புறுத்தியது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ விசாரணை செய்தது சரி, பாஜக ஆட்சியில் தவறா?
நடந்த இந்த துன்ப சம்பவத்துக்கான காரணத்தையும், காரணமானவர்களையும் நீதியின் முன் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சிபிஐயும் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்பார்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதே நம் கேள்வி?" என்று அவர் கூறியுள்ளார்.