ஒடிசா ரயில் விபத்து | தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை: உதயநிதி தகவல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: "ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒடிசா ரயில் விபத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளவர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியது: "ஒடிசாவில் இருந்து நான் கிளம்பும்போது, தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் குறித்து ஒரு தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், சென்னை வந்தவுடன் நேற்று இரவுகூட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன்.

அந்த 8 பேரும் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றனர். அதில் இரண்டு பேருடன் நேரடியாக பேசியாகிவிட்டது. மற்ற 6 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக, அவர்களுடன் பயணித்த பயணிகள் கூறியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயணித்த ரயில் பெட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த 6 பேரிடம் இதுவரை பேசமுடியவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்.

இன்னொரு ஆறுதல் அளிக்கும் விசயம் என்னவென்றால், நாம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்களுக்கு நிறைய அழைப்புகள் வரவில்லை. மொத்தமாகவே 11 அழைப்புகள்தான் வந்தன. அந்த அழைப்புகளிலும், யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தங்களுக்கு தெரிந்தவர்கள் அங்கு சென்றனர். எந்த ஊரில் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்பது போன்ற அழைப்புகளாகத்தான் இருந்ததே தவிர, குறிப்பிட்ட நபரை காணவில்லை என்கிற ரீதியில் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. எனவே, இந்த 6 பேரும் பாதுகாப்பாக இருப்பார்கள், விரைவில் நமக்கு ஆறுதல் தரக்கூடிய செய்தி வரும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரடியாக சென்று தமிழக பயணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in