Published : 05 Jun 2023 06:19 AM
Last Updated : 05 Jun 2023 06:19 AM

தமிழகம் முழுவதும் 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் நாளை திறந்துவைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வுசெய்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் 2022 மே மாதம் 7-ம் தேதி, தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக நாளை (ஜூன் 6) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வர் நேரடியாகத் திறந்துவைக்கிறார். மற்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x