Published : 08 Oct 2017 06:11 PM
Last Updated : 08 Oct 2017 06:11 PM

டெங்குவைக் கட்டுப்படுத்தாத மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து அக்.11-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் பத்து பேர் என டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவுக்கு பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு டெங்கு காயச்சலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மட்டுமின்றி டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டி உண்மையை மூடிமறைத்துவருகிறது.

தமிழக அரசின் இந்தப்போக்கைக் கண்டித்தும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவுக்கும் சிகிக்சை அளிக்க வலியுறுத்தியும் அக்டோபர் 11ஆம் தேதி புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துகொள்கிறோம்.

ஒவ்வொரு நாளும் பத்து முதல் இருபது பேர் வரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10,392 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும் மொத்தத்தில் காய்ச்சல் காரணமாக 75 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 27 பேர் மட்டும்தான் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது முழு பூசணிக்காயை சோற்றுப் பருக்கையில் மறைப்பதைப் போன்றதாகும். உண்மைக்கு மாறான தகவல்களை அரசு செயலாளரே கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. பிற மாநிலங்களில் டெங்குவைப் பற்றி உண்மை விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அதுபோல, தமிழக அரசும் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

முந்தைய ஆண்டுகளைவிட தற்போது டெங்கு மரணம் அதிகமாக இருப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். சுகாதார நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் சரியாக செயல்படுத்தமுடியும்.

தனியார் மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சைப்பெற பண வசதி இல்லாத காரணத்தினால் ஒரு தாய் தனது குழந்தையோடு தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளியானபிறகும் டெங்கு சிகிச்சையை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கவேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்பும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. கொள்ளைநோய் சட்டம் 1897 (Epidemic Diseases Act of 1897 ) அதற்கு வழிசெய்கிறது. அந்த சட்டத்தின் அடிப்படையில் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தாமல் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாஜகவின் முன்னணித் தலைவர்கள் மாநில அரசை மட்டும் குறைகூறிப் பேசிவருகின்றனர். டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் வேதனையளிக்கிறது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சையை உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில், எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x